குடிநீர் பிரச்சினையை தீர்க்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன? அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம்


குடிநீர் பிரச்சினையை தீர்க்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன? அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம்
x
தினத்தந்தி 13 Feb 2019 10:30 PM GMT (Updated: 13 Feb 2019 7:50 PM GMT)

குடிநீர் பிரச்சினையை தீர்க்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன என்பது குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டசபையில் விளக்கம் அளித்தார்.

சென்னை, 

குடிநீர் பிரச்சினையை தீர்க்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன என்பது குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டசபையில் விளக்கம் அளித்தார்.

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

குடிநீர் பஞ்சம்

தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் மிக கடுமையாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய பூண்டி ஏரி, சோழவரம் ஏரி, புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய அனைத்து ஏரிகளின் நீர் மட்டம் படுபாதாளத்துக்கு போய்விட்டது. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் குறைந்தது, 20 மாவட்டங்களில் நிலத்தடி நீர் படுமோசமாக குறைந்து விட்டதாக ஆய்வு அறிக்கைகள் வெளியாகி வருகின்றன.

குறிப்பாக, சென்னை மாநகர மக்களுக்கு கிடைக்க வேண்டிய மழை அளவு 55 சதவீதம் குறைந்து விட்டதால், குடிநீருக்கு பெரும் அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்தாண்டு பட்ஜெட்டில் தடையின்றி தண்ணீர் வழங்க வேண்டும் என்பதற்காக ரூ.157 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது யானை பசிக்கு சோளப்பொரி போன்றதாகும்.

வெள்ளை அறிக்கை

2016–2017, 2017–2018 மற்றும் 2018–2019 பட்ஜெட்டுகளில் மட்டும் ஏறக்குறைய ரூ.15 ஆயிரம் கோடிக்கு குடிநீர் திட்டங்களை நிறைவேற்றப்போவதாக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டது. 5 கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நெம்மேலி, சென்னை அருகே பேரூர், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குதிரைமொழி, தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தலை ஆகிய இடங்களில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், விழுப்புரம் – கடலூர் மாவட்டங்களில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் என மொத்தம் ரூ.9,692 கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

அ.தி.மு.க. ஆட்சியில் மொத்தமாக அறிவிக்கப்பட்ட ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான குடிநீர் திட்டங்களின் நிலை என்ன என்பது ஒரு கேள்விக்குறியாக இருந்து கொண்டிருக்கிறது. எனவே, அரசு இதுகுறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்த குடிநீர் திட்டங்களை எல்லாம் உடனடியாக செயல்படுத்தக்கூடிய முயற்சியிலே இந்த அரசு ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

நடவடிக்கை

அவரைத் தொடர்ந்து, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி எழுந்து பேசினார். அப்போது அவர், ‘‘தமிழகத்தில் 60 சதவீதம் மழை அளவு குறைந்துள்ளது. சென்னையில் இப்போதே தண்ணீர் பிரச்சினை தொடங்கிவிட்டது. பல மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை உள்ளது. ஒரு குடம் தண்ணீர் ரூ.10 கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். ஆனால், நீங்கள் (அ.தி.மு.க.) மாறுபட்டு நிற்கிறீர்கள். குடிநீர் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்து, பஞ்சத்தை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

குடிநீர் திட்டப்பணிகள்

இதற்கு பதில் அளிக்கும் வகையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:–

கடந்த மாதம் (ஜனவரி) வரை குடிநீர் திட்டப்பணிகளுக்காக ரூ.14,219 கோடியே 59 லட்சம் ஒதுக்கீடு செய்து, அதன் மூலம் ஒரு லட்சத்து 23 ஆயிரம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, குடிநீர் திட்டப்பணிகளுக்கு தந்த முக்கியத்துவத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில், குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க மோட்டார் திறனை அதிகரித்தல், ஆழ்துளை குழாய் கிணறுகளை சுத்தப்படுத்துதல் மற்றும் ஆழப்படுத்துதல், புதிய ஆழ்துளை குழாய் கிணறுகள் அமைத்தல், லாரிகள் மூலம் குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட 39,257 பணிகள் மேற்கொள்ள ரூ.1,015 கோடியே 34 லட்சத்தில் செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கூட்டுக்குடிநீர் திட்டங்கள்

கோடைகால குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க முதற்கட்டமாக 31–1–2019 அன்று சென்னை குடிநீர் வாரியத்துக்கு ரூ.122 கோடியும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு ரூ.36 கோடியும் என மொத்தம் ரூ.158 கோடி நிதியினை ஒதுக்கி, வறட்சி நிவாரணப்பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

தி.மு.க. ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாத 8 பெரிய கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, நிதி ஒதுக்கீடு செய்தும், விருதுநகர், சேலம், வேலூர், மதுரை, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 74 லட்சத்து 82 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையிலான, 6 கூட்டுக்குடிநீர் திட்டங்களை ரூ.2,936 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளார். மீதமுள்ள 2 கூட்டுக்குடிநீர் திட்டங்களும் தற்போது முடிக்கப்பட்டு, சோதனை ஓட்டத்தில் உள்ளது.

குடிநீர் பிரச்சினை

மத்திய–மாநில அரசு நிதியுதவியின் கீழ் செயல்படுத்தப்படும் அம்ரூத் திட்டத்தின் கீழ் 6 மாநகராட்சிகளிலும், 5 நகராட்சிகளிலும் 60 லட்சத்து 46 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.5,506 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் 14 குடிநீர் திட்டப்பணிகளை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது. அவற்றில் 12 திட்டப்பணிகள் செயலாக்கத்தில் உள்ளன. மீதமுள்ள 2 பணிகள் விரைவில் செயலாக்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.

இந்த ஆண்டு குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.11 கோடியில் சிக்கராயபுரம் கல்குவாரி நீரினை சுத்திகரித்து தினமும் 30 எம்.எல்.டி. குடிநீர் வழங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. எருமையூர் கல் குவாரியில் இருந்து ரூ.19 கோடியே 17 லட்சம் செலவில் நாள் ஒன்றுக்கு 10 எம்.எல்.டி. (மில்லியன் லிட்டர்) குடிநீர் பெற ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

வீராணம் ஏரி நிரப்பப்படும்

மேட்டூர் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு மீண்டும் ஒரு முறை நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெய்வேலி நீர் படுகையில் ரூ.6.67 கோடி செலவில் கூடுதலாக 9 புதிய ஆழ்துளை கிணறுகள் நாள் ஒன்றுக்கு 10 எம்.எல்.டி குடிநீர் வழங்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

நெய்வேலி சுரங்கத்தில் இருந்து 25 எம்.எல்.டி. மற்றும் பரவனாறு ஆற்றில் இருந்து 40 எம்.எல்.டி. மற்றும் கெடிலம் ஆற்றுப்படுகையில் 25 எம்.எல்.டி. ஆக மொத்தம் 90 எம்.எல்.டி. குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.47 கோடியில் பூண்டி, தாமரைப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 350 விவசாய கிணறுகள் மூலம் 90 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்படும். ரூ.53 கோடியில் இரட்டை ஏரி, பெரும்பாக்கம், அயனம்பாக்கம் ஆகிய 3 ஏரிகளில் இருந்து நாளொன்றுக்கு 30 எம்.எல்.டி. நீரை சுத்திகரித்து குடிநீர் வழங்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது

ரூ.42.78 கோடியில் பெருங்குடியிலும், ரூ.41 கோடியில் நெசப்பாக்கத்திலும், நாளொன்றுக்கு 10 எம்.எல்.டி. சுத்திகரிப்பு திறன் கொண்ட தலா ஒரு 3–ம் நிலை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. இங்கு கிடைக்கும் சுத்திகரித்த நீரை வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.8 கோடியில் நிலத்தடி நீர் பெற புதிதாக 423 இந்தியா மார்க் 2 பம்புகள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.9 கோடியில் 171 எண்ணிக்கை புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ரூ.4.71 கோடியில் 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 1,294 குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படும். ரூ.39.60 கோடியில் கூடுதல் லாரிகளை வாடகைக்கு அமர்த்தி குழாய் மூலம் குடிநீர் செல்லாத பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படும். கண்டலேறு அணையில் இருந்து 7 மில்லியன் கனஅடி அளவுக்கு கிருஷ்ணா நதி நீர் வரப்பெற்றுள்ளது. ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி. நீர் கிடைக்கப்பெற வேண்டும். இதில் 2 டி.எம்.சி. நீர் தான் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் கடுமையான வறட்சி ஏற்பட்டாலும், இந்த பணிகளால், சென்னை மாநகருக்கு டிசம்பர் மாதம் வரை தினமும் 550 எம்.எல்.டி. குடிநீர் வழங்கப்படும். எனவே, தமிழகத்தில் ஊரகம் மற்றும் நகரப்பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் அ.தி.மு.க. அரசு சீரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story