மாநில செய்திகள்

வடசென்னை அனல் மின்சார திட்டம் டிசம்பரில் தொடங்கும் அமைச்சர் தங்கமணி அறிவிப்பு + "||" + North Zone Thermal Power Project Starting in December

வடசென்னை அனல் மின்சார திட்டம் டிசம்பரில் தொடங்கும் அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

வடசென்னை அனல் மின்சார திட்டம் டிசம்பரில் தொடங்கும் அமைச்சர் தங்கமணி அறிவிப்பு
வடசென்னை அனல் மின்சார திட்டம் வரும் டிசம்பரில் தொடங்கும் என்று சட்டசபையில் அமைச்சர் தங்கமணி அறிவித்தார்.

சென்னை, 

வடசென்னை அனல் மின்சார திட்டம் வரும் டிசம்பரில் தொடங்கும் என்று சட்டசபையில் அமைச்சர் தங்கமணி அறிவித்தார்.

வேலை வாய்ப்பு பயிற்சி

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்கள் விவாதம் நேற்று தொடர்ந்து நடந்தது. விவாதத்தின் நிறைவாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் (தி.மு.க.) உரையாற்றினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:–

துரைமுருகன்:– பல்வேறு வகைகளில் மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய ரூ.13 ஆயிரத்து 552 கோடி தொகை இன்னும் வரவில்லை. இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் என்ற அமைப்பை அமைப்பதாக 2011–12–ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அப்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 65 லட்சம் பேர் பதிவு செய்து இருந்தனர். பின்னர் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சி 2023–ம் ஆண்டுக்குள் அளிக்கப்படும் என்று கூறினீர்கள். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்பட்ட மொத்த நிதி 809 கோடி ரூபாயாகும்.

இந்தநிலையில், கடந்த 2018–19–ம் ஆண்டில் இதுவரை 4.3 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருப்பதாக கூறியிருக்கிறீர்கள். அதன்படி, ஆண்டுக்கு 54 ஆயிரம் பேருக்குத்தான் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தில் சென்றால், 2 கோடி பேருக்கு பயிற்சி அளிக்க பல ஆண்டுகள் ஆகிவிடும். வேலை வாய்ப்புக்காக காத்திருப்போரின் எண்ணிக்கையும் 83 லட்சத்தை தாண்டிவிட்டது.

அமைச்சர் நிலோபர் கபில்:– 87 தொழில் பயிற்சி மையங்கள் மூலம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டு வேலை வாய்ப்புக்கான மெகா வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

தரக்குறைவாக பேசலாமா?

துரைமுருகன்:– உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் வந்த முதலீடுகள், வேலை வாய்ப்புகள் பற்றிய வெள்ளை அறிக்கையை ஏன் மாநில அரசு தரவில்லை?

அமைச்சர் எம்.சி.சம்பத்:– இதற்கு ஏன் வெள்ளை அறிக்கை வேண்டும்? 2015–ம் ஆண்டு நடந்த மாநாட்டில் போடப்பட்ட 98 ஒப்பந்தங்களில் 6 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கான ஒப்பந்தங்கள் மட்டும் நிலுவையில் உள்ளன. இந்த மாநாடும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 304 நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன.

சாலையில் செல்பவர்களை எல்லாம் ‘கோட்–சூட்’ போட்டு அழைத்து வந்து மாநாட்டில் உட்கார வைத்துவிட்டனர் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதலீடு செய்வோரை இப்படி தரக்குறைவாக பேசலாமா?

முதலீட்டாளர்கள் அவரையும் வந்து சந்திக்கின்றனர். முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தவும் முதலீட்டாளர்கள் வந்தனர். அவர்களையெல்லாம் கூட்டி விவாதிக்க நான் தயார்? அவர் தயாரா? அவர்களை கொச்சைப்படுத்தலாமா? அவர்கள் எல்லோரும் சாலையில் செல்வோரா? அவர்கள் மனநிலையை புண்படுத்தும் வார்த்தை அது.

துரைமுருகன்:– அந்த ஒப்பந்தங்களை கொண்டுவந்தால் எங்களுக்கு மகிழ்ச்சிதான். யார் ஆட்சி என்றாலும், நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும்.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:– அதை ஒரு குற்றச்சாட்டாக கூறியதால்தான் அமைச்சர் அந்த பதிலை தெரிவித்தார். யார் ஆட்சி நடந்தாலும் தமிழகத்தில் புதிய தொழில் தொடங்கப்பட வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமாகும்.

துரைமுருகன்:– சாலையில் செல்வோர் என்று கூறுகிறீர்கள். சாலையில் செல்வோர் என்ன கேவலமா?

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:– துரைமுருகன் திறமையானவர். எப்படி சமாளிக்க வேண்டும் என்பதற்கான அத்தனை வித்தைகளையும் தெரிந்தவர். அதை உங்களிடம் இருந்து நாங்கள் கற்க வேண்டும்.

வடசென்னை திட்டம் டிசம்பரில்...

துரைமுருகன்:– ரூ.22 ஆயிரம் கோடி செலவில் 3,800 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய உடன்குடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்தீர்கள். இதில் ஏதாவது ஒரு திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதா? எத்தனை மெகாவாட் மின்சாரம் கிடைத்துள்ளது?

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட மின்சார திட்டத்தையும் நடைமுறைப்படுத்தினீர்களா? ஏற்கனவே அறிவித்த திட்டங்களை நிறைவேற்றிவிட்டு புதிய மின் திட்டத்தை அறிவித்துள்ளீர்களா?

அமைச்சர் தங்கமணி:– துரைமுருகன் குறிப்பிட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் வர இருக்கின்றன. காலதாமதம்தான் ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் போராட்டம், இடம் எடுக்கும் பிரச்சினையில் வழக்கு என்று பல்வேறு இடையூறுகளால் காலதாமதம் ஆகிக்கொண்டிருக்கின்றன.

2027–ம் ஆண்டுக்குள் 13 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை கொண்டு வரும் திட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. கண்டிப்பாக அவை குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட்டுவிடும். வடசென்னையில் 800 மெகாவாட் அனல் மின்சார திட்டத்தை டிசம்பரில் தொடங்க இருக்கிறோம்.

எண்ணூர் திட்டத்தை எடுத்த நிறுவனம் திவாலாகிவிட்டதால் புதிய டெண்டர் போடப்பட்டுள்ளது. உடன்குடி மின்சார திட்ட பணிகள் நடக்கின்றன. அதில் உள்ள போராட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது. மின்வெட்டே இல்லை என்ற நிலையை உருவாக்கிய அரசு இது.

கடனில் வந்த மிகை

துரைமுருகன்:– மின்மிகை மாநிலம் என்று கூறுகிறீர்கள். ஆனால் கடன் பெற்றுதான் இதை கொடுக்கிறீர்கள். நீங்கள் என்ன செய்தீர்கள்? என்பதுதான் எங்கள் கேள்வி.

அமைச்சர் தங்கமணி:– 2001–06–ம் ஆண்டு காலத்தில் தமிழகத்தின் மின் தேவை 9,500 மெகாவாட்டாக இருந்தது. ஆனால் உங்கள் ஆட்சி காலத்தில் ஏன் மின்வெட்டு வந்தது? மின்சார வாரியத்தின் கடனும் உயர்ந்தது. புதிய திட்டங்களுக்கு கடன் வாங்கித்தான் செய்ய முடியும். எங்கள் ஆட்சி காலத்தில் 4 ஆயிரம் மெகாவாட் நிறுவுதிறன் கொண்டு வந்தோம். உங்கள் ஆட்சியில் அது குறைவு. மின்சார திட்டத்தில் எங்களைவிட நீங்கள்தான் அதிகம் கடனை வாங்கினீர்கள்.

துரைமுருகன்:– நாங்களும் திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் மின்மிகை மாநிலம் என்று சொல்லிக்கொள்ளவில்லை. ஆனால் நீங்கள் கடன் வாங்கிக் கொடுத்துவிட்டு பெரியதாக கூறிக்கொள்கிறீர்கள்.

தனிநபர் வருமானம்

ஒவ்வொரு தனிநபர் வருமானம் 6 மடங்காக உயரும் என்று 2012–ம் ஆண்டில் அறிவித்தீர்கள். அதாவது ரூ.1.03 லட்சம் என்பது 10 ஆண்டுகளில் ரூ.6.21 லட்சமாக உயரும் என்று குறிப்பிட்டீர்கள். ஆனால் 2017–18–ம் ஆண்டில் ரூ.1.42 லட்சமாகத்தான் உயர்ந்துள்ளது. இது எப்படி இன்னும் 4 ஆண்டுகளில் ரூ.6.21 லட்சமாக உயரும்?

2013–14–ம் ஆண்டில் மதுரை–தூத்துக்குடி இடையே தொழில் வழித்தடம் ஏற்படுத்தப்படும் என்று கூறினீர்கள். 10 ஆண்டு காலத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் தொழில் முதலீட்டை ஈர்க்க முடியும் என்று கூறினீர்கள். இதே கருத்தை அடுத்தடுத்த பட்ஜெட்டில் குறிப்பிட்டீர்கள். ஆனால் இந்த பட்ஜெட்டில் அதை நிறுத்திவிட்டீர்கள்.

இந்த பட்ஜெட்டை பற்றி எல்லாரும் ஆளுக்கொன்று கூறியுள்ளனர். நேருக்கு நேர் பார்த்து பழகிவிட்டோம். அ.தி.மு.க. அரசின் கடைசி பட்ஜெட் இதுதான் என்று எனக்கு தோன்றுகிறது.

இவ்வாறு விவாதம் நடந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. டாக்டர்களின் போராட்டத்தால் நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
டாக்டர்களின் போராட்டத்தால் நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
2. அதிகளவில் மழைபெய்ய பொதுமக்கள் மரக்கன்றுகள் நடுங்கள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள்
அதிகளவில் மழைபெய்ய பொதுமக்கள் மரக்கன்றுகள் நடுங்கள் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. திருவாரூர் மாவட்டத்தில் குடி மராமத்து பணிகளுக்காக ரூ.16 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீடு அமைச்சர் தகவல்
திருவாரூர் மாவட்டத்தில், குடி மராமத்து பணிகளுக்காக ரூ.16 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.
4. 318 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 67 லட்சம் உதவித்தொகை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்
318 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 67 லட்சம் உதவித்தொகையை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.
5. பெரம்பலூரில் ரூ.9¼ கோடியில் போலீஸ் குடியிருப்புகள் முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
பெரம்பலூரில் ரூ.9¼ கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள போலீஸ் குடியிருப்புகளை முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.