மாநில செய்திகள்

அதிமுக - பாஜக கூட்டணி உறுதியானது? அடுத்த வாரம் சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு + "||" + AIADMK-BJP coalition is firm? Official Announcement at Meeting in Chennai

அதிமுக - பாஜக கூட்டணி உறுதியானது? அடுத்த வாரம் சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உறுதியானது? அடுத்த வாரம் சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிமுக - பாஜக கூட்டணி உறுதியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வாரம் சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.
சென்னை,

பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய மந்திரி பியூஸ் கோயல், நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.

இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் விமான நிலையத்தில் உள்ள ஓய்வறையில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கத்தின்  இல்லத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரை பியூஷ் கோயல் சந்தித்துப்பேசினார். சந்திப்பின் போது பியூஸ் கோயலுடன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் உடனிருந்தனர். சுமார் மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகிய இருவரும் அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழுவில் இடம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பேச்சுவார்த்தை முடிந்து இரவோடு இரவாக தனி விமானம் மூலமாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர் சென்ற பின்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கூட்டணி பேச்சுவார்த்தை திருப்திகரமாக உள்ளது என்றும், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை தொடரும் என்றும் தெரிவித்தார். 

பாஜக - அதிமுக இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதன் மூலம் பாஜக-அதிமுக கூட்டணி ஏறக்குறைய உறுதியாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

அடுத்த வாரம் சென்னையில் நடைபெறும்  கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக அறிவிக்கிறார்கள்.

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நாளை மீண்டும் சென்னை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது . நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.