காஷ்மீர் தாக்குதல்; காட்டுமிராண்டி செயல்களுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கி உள்ளது: நடிகர் ரஜினிகாந்த்


காஷ்மீர் தாக்குதல்; காட்டுமிராண்டி செயல்களுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கி உள்ளது:  நடிகர் ரஜினிகாந்த்
x
தினத்தந்தி 15 Feb 2019 1:34 PM GMT (Updated: 15 Feb 2019 1:34 PM GMT)

காட்டுமிராண்டி செயல்களுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கி உள்ளது என காஷ்மீர் தாக்குதல் சம்பவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் (மத்திய ஆயுதப்படை போலீசார்) 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறையில் சென்றிருந்தனர். அவர்கள் அனைவரும் விடுமுறை முடிந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ஜம்முவில் இருந்து 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பாதுகாப்புக்கு கவச வாகனங்கள் உடன் சென்றன. மாலை 6 மணிக்குள் அவர்கள் சென்றடைய திட்டமிட்டிருந்தனர்.

அவர்களது வாகனங்கள், ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன.

அப்போது பயங்கரவாதி ஒருவன் சற்றும் எதிர்பாராத வகையில் ஏராளமான வெடிகுண்டுகளை நிரப்பிய சொகுசு காரை துணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ்களில் ஒன்றை குறிவைத்து வேகமாக மோதினான். அப்போது பலத்த சத்தத்தோடு குண்டுகள் வெடித்து சிதறின. அதில் அந்த பஸ் முற்றிலும் நாசமானது. அத்துடன் வந்த பல வாகனங்களும் சேதம் அடைந்தன.  இதில் துணை ராணுவ படையினர் 44 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த தாக்குதலை பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்றனர்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில், காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய மன்னிக்க முடியாக வன்முறை சம்பவத்திற்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கின்றேன்.  நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.

இதுபோன்ற காட்டுமிராண்டித்தன செயல்களுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கி உள்ளது.  உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கலை தெரிவித்து கொள்கிறேன்.  வீரம் நிறைந்தவர்கள் உயிரிழந்து உள்ளனர்.  அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும் என தெரிவித்து உள்ளார்.


Next Story