மாநில செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் பலிஉருக்கமான தகவல்கள் + "||" + Terrorists attack in Kashmir 2 soldiers killed in Tamil Nadu

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் பலிஉருக்கமான தகவல்கள்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் பலிஉருக்கமான தகவல்கள்
காஷ்மீரில் பயங்கர வாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் தமிழக வீரர்கள் பலியானார்கள்.
தூத்துக்குடி, 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது நேற்று முன்தினம் வெடிகுண்டு நிரப்பிய சொகுசு காரை மோதவிட்டு பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 40-க்கு மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

அவர்களில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சவலாப்பேரி மேல தெருவைச் சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியனும் (வயது 30) வீர மரணம் அடைந்தார். சுப்பிரமணியன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரராக பணியாற்றினார். இவருக்கு கிருஷ்ணவேணி (23) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

சுப்பிரமணியன் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர் கடந்த 10-ந் தேதி காலையில் மீண்டும் பணிக்கு புறப்பட்டு சென்றார். நேற்று முன்தினம் சுப்பிரமணியன் ஸ்ரீநகர் சென்று மீண்டும் பணியில் சேர்ந்ததாக தன்னுடைய மனைவியிடம் செல்போனில் தெரிவித்தார்.

இந்த நிலையில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் சகவீரர்களுடன் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் சவலாப்பேரி கிராமமே சோகத்தில் மூழ்கியது.

இதுகுறித்து சுப்பிரமணியனின் உறவினர்கள் தெரிவித்த உருக்கமான தகவல்கள் வருமாறு:-

சுப்பிரமணியன் ஐ.டி.ஐ. படித்து விட்டு, கடந்த 5 ஆண்டு களாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றி வந்தார். அவர் முதலில் சென்னையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரராக பயிற்சி பெற்றார். பின்னர் அவர் உத்தரபிரதேசத்திலும், தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் பணியாற்றினார். பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சுப்பிரமணியம் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் விடுமுறை முடிந்து அவர் மீண்டும் பணியில் சேர்ந்த அன்றே இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. முன்னதாக அவர் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு தான் பணியில் சேர்ந்த தகவலை தெரிவித்து இருக்கிறார். ஆனால், அவருக்கு இந்த நிலை ஏற்படும் என்று நாங்கள் யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

சுப்பிரமணியனின் தந்தை கணபதி விவசாயி ஆவார். தாயார் மருதம் அம்மாள். சுப்பிரமணியனுக்கு பேச்சியம்மாள், வேல்தாய் ஆகிய 2 அக்காள்களும், கிருஷ்ணசாமி என்ற அண்ணனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

வீரமரணம் அடைந்த சுப்பிரமணியனின் குடும்பத்தினருக்கு கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், தாசில்தார் லிங்கராஜ் மற்றும் வருவாய் துறையினர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

சுப்பிரமணியனின் உடல் இன்று (சனிக்கிழமை) அவரது சொந்த ஊரான சவலாப்பேரிக்கு கொண்டுவரப்பட்டு, ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.

இதே போல் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் சிவசந்திரன் பலியாகி உள்ளார். அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த சிவசந்திரன் குறித்த விவரம் வருமாறு:-

உடையார்பாளையம் தாலுகா தா.பழூர் அருகே கார்குடி கிராமத்தில் உள்ள காலனி தெருவை சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி சிங்காரவள்ளி. இந்த விவசாய தம்பதிக்கு 2-வது மகனாக பிறந்தவர் சிவசந்திரன் (வயது 33). எம்.ஏ. பிஎட். பட்டதாரியான இவருக்கு நாட்டின் மீது அதிக பற்று ஏற்பட்டதால், ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்கு பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் கடந்த 2010-ம் ஆண்டில் நடந்த ராணுவத்திற்கான ஆட்கள் தேர்வில் கலந்து கொண்டு தேர்வானார். 2010-ம் ஆண்டு முதல் சிவசந்திரன் காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காஷ்மீரில் துணை ராணுவ வீரர்களின் வாகனங்களை குறி வைத்து பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவன் நடத்திய வெடி குண்டு தாக்குதலில் இவரும் பலியான சம்பவம் அந்த கிராமத்தை மட்டுமல்லாமல் அரியலூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சிவசந்திரன் தனது கிராமத்தை சேர்ந்த காந்திமதி (28) என்கிற பெண்ணை காதலித்து கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது 2 வயதில் சிவமுனியன் என்கிற மகன் உள்ளான். மேலும் காந்திமதி தற்போது கர்ப்பமாக உள்ளார். கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி சிவசந்திரன் காஷ்மீரில் இருந்து விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது அவர் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

பின்னர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்தித்து விட்டு, கடந்த வாரம் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று தரிசனம் செய்தார். பின்னர் விடுமுறை முடிந்து மீண்டும் ராணுவத்தில் பணியாற்ற கடந்த 9-ந் தேதி சிவசந்திரன் சொந்த ஊரில் இருந்து புறப்பட்டு காஷ்மீர் சென்றார்.

நேற்று முன்தினம் மதியம் தான் சிவசந்திரன் தனது குடும்பத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தனது மனைவி காந்திமதியிடம் மகன் சிவமுனியனை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறும், கர்ப்பமாக உள்ள நீயும் தவறாமல் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறும், நன்கு உடலை கவனித்து கொள்ளுமாறும் சிவசந்திரன் பேசியதாக தெரிவித்தார்.

வீர மரணம் அடைந்த சிவசந்திரனுக்கு ஜெயந்தி என்கிற அக்காவும், ஜெயசித்ரா என்கிற தங்கையும், செல்வசந்திரன் என்கிற தம்பியும் உள்ளனர். இதில் செல்வசந்திரன் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த ஆண்டு வேலை பார்த்தபோது மின்சாரம் தாக்கி பலியானார். ஜெயந்தி திருமணமாகி கார்குடி கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார். மனநிலை பாதிக்கப்பட்டவரான ஜெயசித்ரா வீட்டில் பெற்றோரின் பராமரிப்பில் உள்ளார். சின்னையன்- சிங்காரவள்ளி தம்பதி ஏற்கனவே இளைய மகன் செல்வசந்திரனை மின்சாரம் தாக்கியதில் பறி கொடுத்தனர். இந்நிலையில் சிவசந்திரனையும் பறிகொடுத்து விட்டு தவித்து வருகின்றனர்.

சிவசந்திரனின் தந்தை சின்னையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிறு வயது முதலே சிவசந்திரன் நாட்டுப்பற்று மிக்கவராக இருந்து வந்தார். எப்போதும் நாடு, நாடு என்று கூறுவார். நாட்டை காப்பாற்ற சென்றவர் வீட்டில் உள்ளவர்களை தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டார். விடுமுறையில் வந்திருந்தவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பே பணிக்கு சென்றார். நேற்று மதியம் (அதாவது நேற்று முன்தினம் மதியம்) 12 மணியளவில் சிவசந்திரன் அவரது மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அரசு என்னதான் சலுகைகள் கொடுத்தாலும் இனி என் மகனின் உயிர் வராது. நாட்டுக்காக அவரை அர்ப்பணித்து கொண்டார். இப்படி ஒரு பிள்ளையை பெற்றதற்காக பெருமைப்படுகிறேன். இவ்வாறு கூறி கதறி அழுதார்.

மேலும் சிவசந்திரன் வீட்டிற்கு அருகில் உள்ள அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...