சின்னதம்பி யானை மரக்கூண்டில் அடைக்கப்பட்டது


சின்னதம்பி யானை மரக்கூண்டில் அடைக்கப்பட்டது
x
தினத்தந்தி 16 Feb 2019 10:30 PM GMT (Updated: 16 Feb 2019 8:21 PM GMT)

உடுமலை அருகே பிடிபட்ட சின்னதம்பி யானை மரக்கூண்டில் அடைக்கப்பட்டது.

பொள்ளாச்சி, 

கோவை தடாகம் பகுதியில் அட்டகாசம் செய்த சின்னதம்பி யானையை கடந்த மாதம் 25-ந்தேதி பிடித்து டாப்சிலிப் வரகளியாறு பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர். அந்த யானை 31-ந்தேதி பொள்ளாச்சி அருகே அங்கலகுறிச்சி, கோட்டூர் ஊருக்குள் புகுந்தது. அதன்பிறகு ரேடியோ காலர் மூலம் கண்காணித்த வனத்துறையினர் யானையை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர். அங்கிருந்து சென்ற யானை உடுமலை அருகே மடத்துக்குளம் கண்ணாடிபுத்தூர் பகுதியில் முகாமிட்டது. பின்னர் அங்கிருந்த கரும்பு, வாழை மரங்களை சாப்பிட்டு சேதப்படுத்தியது. இதையடுத்து யானையை பிடித்து முகாமில் வைத்து பராமரிக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் சென்னை ஐகோர்ட்டு சின்னதம்பி யானையை முகாமில் அடைத்து பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில் பாதுகாப்பாக பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து நேற்று முன்தினம் கும்கி யானைகள் கலீம், சுயம்பு உதவியுடன் சின்னதம்பி யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது மயக்க ஊசி செலுத்தப்பட்டு சின்ன தம்பி யானை பிடிபட்டது. பின்னர் அதனை லாரியில் ஏற்றி பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் வரகளியாறில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர். வரும் வழியில் தேவனூர்புதூரில் வைத்து அந்த யானைக்கு மீண்டும் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. டாப்சிலிப்பிற்கு நேற்று முன்தினம் இரவு 7.20 மணிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு, வரகளியாறுக்கு நள்ளிரவு 11.45 மணிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு யானைக்கு பயிற்சி அளிக்க தயார் செய்யப்பட்டு இருந்த மரக்கூண்டை (கிரால்) ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது துணை இயக்குனர் மாரிமுத்து, வனச்சரகர் நவீன்குமார், ஓய்வு பெற்ற வனச்சரகர் தங்கராஜ் பன்னீர்செல்வம், வனவர் முனியாண்டி ஆகியோர் உடன் இருந்தனர்.

அதை தொடர்ந்து லாரியில் இருந்து யானையை இறக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஒவ்வொரு கயிறாக அவிழ்த்தனர். அப்போது யானை முரண்டு பிடித்தது. இதையடுத்து டாக்டர் கலைவாணன் மயக்க ஊசி செலுத்த முயற்சி செய்தார். ஆனால் ஊசியை யானை தட்டி விட்டது. இதையடுத்து யானையின் கவனத்தை திசை திருப்ப, முன்புறம் செல்வி, சிவகாமி ஆகிய பெண் யானைகளை பாகன்கள் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

சின்னதம்பி யானை தும்பிக்கையை தூக்கி, பெண் யானையின் தலையில் தடவி கொடுத்து கொண்டு இருந்தது. அப்போது டாக்டர் கலைவாணன் தயார் நிலையில் வைத்திருந்த மயக்க ஊசியை செலுத்தினார். பாதி மயக்கத்தில் இருந்த யானையின் கழுத்து மற்றும் கால்களில் வனத்துறையினர் கயிற்றை கட்டி கொண்டு மரக் கூண்டை நோக்கி இழுத்தனர். ஆனால் யானை நகராமல் அப்படியே நின்றது.

பின்னர் கும்கி யானை கலீம் சின்னதம்பி யானையின் பின்புறம் சென்று தள்ளியது. இருந்தாலும் மரக்கூண்டின் முன்புறம் சென்ற யானை உள்ளே செல்லாமல் தலையை மட்டும் கூண்டுக்குள் விட்டப்படி நின்று கொண்டு இருந்தது.

பின்னர் சிவகாமி யானை சின்னதம்பி யானையின் பின்புறம் சென்று முட்டி தள்ளி கூண்டுக்குள் தள்ளியது. யானை சரியாக நள்ளிரவு 1.45 மணிக்கு கூண்டுக்குள் சென்றது. உடனே வனத்துறையினர் மரக்கூண்டை அடைத்தனர். அதன்பிறகு டாக்டர் கலைவாணன் யானைக்கு மயக்கம் தெளிவதற்கு ஒரு ஊசியும், புத்துணர்ச்சி மற்றும், நோய் தடுப்பிற்கு ஒரு ஊசியும் போட்டார். சுமார் 2 மணி நேரம் போராடி 25-க்கும் மேற்பட்ட வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், பாகன்கள் யானையை மரக்கூண்டில் அடைத்தனர். முன்னதாக டாப்சிலிப்பிற்கு வரும் வழியில் யானையின் தும்பிக்கையில் லேசான காயம் ஏற்பட்டது. யானையை பத்திரமாக கொண்டு வந்து கூண்டில் அடைத்த வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் பாகன்களை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசன் பாராட்டினார்.

Next Story