சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு - ரஜினிகாந்த் அறிவிப்பு: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து


சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு - ரஜினிகாந்த் அறிவிப்பு: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து
x
தினத்தந்தி 17 Feb 2019 6:29 AM GMT (Updated: 17 Feb 2019 7:32 AM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என ரஜினிகாந்த் அறிவிப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.  இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அதனை தொடர்ந்து ஒரு அறிக்கை அவர் வெளியிட்டார். அதில்

வருகின்ற பாராளுமன்றத்தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. தமிழக சட்டமன்றத்தேர்தல் தான் எங்களது இலக்கு. நடைபெறவிருக்கும் பாராளுமன்றத்தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக்கட்சிக்கும் கிடையாது. அதனால் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ, மன்றத்தின் கொடியோ, எந்தக்கட்சிக்கும் ஆதரவாகவோ, பிரச்சாரம் செய்வதற்காகவோ யாரும் பயன்படுத்தக்கூடாது.

தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனை தண்ணீர். வரவிருக்கும் தேர்தலில் மத்தியில் நிலையான, வலுவான ஆட்சி அமைத்து யார் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்த்து வைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறோர்களோ அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

வாழ்க தமிழ் மக்கள். வளர்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த், 

என அதில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என ரஜினிகாந்த் அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஜினி அறிக்கை குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,

தனது நிலைப்பாட்டை அறிவித்த ரஜினிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பது ரஜினியின் கொள்கை.
அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும், திமுக தலைமையிலான கூட்டணிக்குமே போட்டி. கூட்டணி குறித்து அதிமுக தலைமை அறிவிப்பதே அதிகாரப்பூர்வமானது.

அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறுகையில்,

மக்களவை தேர்தலில் போட்டியில்லை என்பதன் மூலம் ரஜினியின் அரசியல் பயணம் நீர்த்துப்போய்விட்டது.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்,

ரஜினியின் அறிவிப்பை நேர்மறையான கருத்தாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். மக்களவை தேர்தலில் ரஜினியின் நிலைப்பாடு சரியான முடிவு தான்.

கராத்தே தியாகராஜன்:- எதிர்பார்த்த முடிவுதான் ரஜினியின் அறிக்கை மூலம் வெளியாகி உள்ளது. பாஜக,அதிமுகவுக்கு ஆதரவு தந்தால் அரசியல் பயணம் பாதிக்கும் என்பது ரஜினிக்கு தெரியும்.

மாா்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: - 

ரஜினிகாந்த் போன்றவர்கள் நல்லவர்கள் பக்கம் இருக்க வேண்டும் எனது கருத்து. மத்தியில் நல்லாட்சி வந்தால் தான் தண்ணீர் பிரச்சனை தீரும். மத்தியில் நல்லாட்சி அமைந்தால்தான் மாநில அரசியலிலும் மாற்றம் கொண்டு வர முடியும். நல்லவர்களுக்கு ஆதரவு இல்லை என்றால், எதிரானவர்களுக்கு ஆதரவா என புரிந்துக்கொள்ளப்படும்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில்,

ரஜினி கூறியிருப்பது போன்று அதிமுக அரசுதான் கோடை காலத்தில் கூட மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. அதனால் ரஜினியின் ஆதரவு எங்களுக்கு தான் இருக்கும். ரஜினியிடம் ஆதரவு கேட்பது குறித்து அதிமுக தலைமை நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என்றார்.

தொல்.திருமாவளவன்:- ரஜினியின் அறிவிப்பு நாடாளுமன்ற தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மக்களவை தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என ரஜினி அறிவித்திருப்பது அவரது தனித்தன்மையை குறிக்கிறது. புல்வாமா தாக்குதலுக்கு எதிராக மத்திய அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் துணை நிற்போம் என்றார்.

Next Story