‘நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை’ ரஜினிகாந்தின் முடிவு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து


‘நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை’ ரஜினிகாந்தின் முடிவு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து
x
தினத்தந்தி 17 Feb 2019 11:45 PM GMT (Updated: 17 Feb 2019 10:08 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை எனும் ரஜினிகாந்தின் முடிவு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

சென்னை,

ரஜினிகாந்தின் முடிவு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார்:-
ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை இருக்கும். தேர்தலில் மக்களை சந்தித்து அதன் மூலம் மகத்தான வெற்றி பெற்று மக்களுக்கு நல்லது செய்வது என்பது அ.தி.மு.க.வின் கொள்கை. தனது கொள்கை என்னவென்று ரஜினிகாந்த் வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள்.

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்:-
மக்களின் நலன் கருதி தண்ணீர் பிரச்சினையை தீர்த்து வைப்பவர்களுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்று ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். அவர் கூறிய அந்த ஆதரவு எங்களுக்கு தானோ, அ.தி.மு.க.வுக்கு தானோ என்று எண்ண தோன்றுகிறது.

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-
ரஜினிகாந்த், கொள்கை ரீதியாக எப்படி? என்று எனக்கு தெரியாது. ஆனால் வாஜ்பாய் நதிகளை இணைக்க வேண்டும் என்ற சொன்னவுடனேயே, ரூ.1 கோடி அறிவித்து, அந்த நல்ல கொள்கைக்கு உடன்பட்டவர் ரஜினிகாந்த். அந்த வகையில் தேச நலனில் அக்கறை கொண்டவர், ரஜினிகாந்த்.

நாங்கள் எதுவும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. பா.ஜ.க. வளர்ந்து வருகிறது? என்பதை அனைவரும் உணர்ந்து வருகிறார்கள். அவர் தெளிவாக ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். அது சரியானது தான்.

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா:-
ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கும்போதே, உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை. சட்டசபை தேர்தலில் தான் போட்டியிடுவேன் என்று கூறியிருந்தார். அதே நிலைப்பாட்டை தான் இப்போதும் அறிவித்துள்ளார். ஒருவர் தனது கட்சியை பற்றி வெளிப்படுத்தும் கருத்தை அனைவரும் மதித்தாக வேண்டும். ஆகவே அவரது கருத்தை பா.ஜ.க. மதிக்கிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர்:-
தனது ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் ஒரு கருத்தை தெரிவித்து உள்ளார். இதில் ஆராய்ந்து ஜோதிடம் சொல்வதற்கு என்ன இருக்கிறது? நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்றபோது தனது கட்சி கொடி, சின்னத்தை யாரும் பயன்படுத்த கூடாது என்று சொல்லியிருக்கிறார். இதில் என்ன இருக்கிறது?

இதை எடுத்துக்கொள்வதும், நிராகரிப்பதும் மக்களின் மனநிலையை பொறுத்த விஷயம். என்னை கேட்டால் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் குடிநீர் பிரச்சினை சரிசெய்யப்படும் என்று சொல்வேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-
பன்னாட்டு முதலாளிகளுக்கு பாதுகாப்பான ஆட்சி வேண்டுமா? மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் ஆட்சி வேண்டுமா? என்ற சூழ்நிலையில் யாருக்கும் ஆதரவு இல்லை என்ற அவரது கருத்து சரியானது அல்ல.

நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றும் சொல்லாதவர், மாநில சட்டசபை தேர்தலில் என்ன சொல்லிவிட போகிறார்? நல்லவர்களை ஆதரிக்கவில்லை என்றால் கெட்டவர்களுக்கு ஆதரவு என்று தான் பொருள் கொள்ளமுடியும். ரஜினிகாந்த் போன்றவர்கள் நல்லவர்கள் பக்கம், நாட்டை காப்பாற்றுபவர்கள் பக்கம் நிற்கவேண்டும்.

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஆர்.முத்தரசன்:-
தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பவர்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று ரஜினிகாந்த் மிகவும் தெளிவாக அறிக்கையில் கூறியிருக்கிறார். நதிநீர் பிரச்சினையில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு எதிராகவே மக்கள் இருக்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும். எனவே ரஜினிகாந்த் மறைமுகமாக பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காதீர்கள் என்று கூறியிருக்கிறார். அவரது கருத்து வரவேற்கத்தக்கது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-
தண்ணீர் பிரச்சினையை தீர்க்கக்கூடியவர்களுக்கு வாக்களியுங்கள் என்று ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வழிகாட்டி உள்ளார். இந்த அறிவிப்பால் தமிழக அரசியலில் எந்த தாக்கமும் ஏற்படாது. இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தரும் என்று கருதுகிறேன்.

நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் வந்தாலும் வரலாம் என்ற கருத்து நிலவுகிறது. அப்போது ரஜினிகாந்த் என்ன முடிவு எடுக்கப்போகிறார்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:-
நீங்களே பார்த்து கொள்ளுங்கள்? என்று சொல்வதற்கு தலைவர் எதற்கு? தலைவன் என்பவர் வழிகாட்டுபவனாக இருக்க வேண்டும். தண்ணீர் பிரச்சினையை யார் தீர்ப்பார்கள்? என்று ரஜினிகாந்த் தானே சொல்லியிருக்க வேண்டும். நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்றால், அவர் எதற்கு?

சட்டசபை தேர்தல் வரட்டும்? என்ன செய்ய போகிறார்? பிரச்சினைகளை எப்படி தீர்க்க போகிறார்? என்று பார்ப்போம்.

தமிழக காங்கிரஸ் தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன்:-
பா.ஜ.க.வுக்கு நிச்சயம் ரஜினிகாந்தின் ஆதரவு இருக்காது. நரேந்திர மோடிக்கு ரஜினிகாந்த் நல்ல நண்பர். அதேபோல அகில இந்திய அளவில் ராகுல்காந்திக்கு நெருக்கமாக இல்லாவிட்டால் கூட ப.சிதம்பரம் போன்ற தலைவர்களுடன் நல்ல நட்பு வைத்திருக்கிறார். இந்த பாராளுமன்ற தேர்தலில் அவர் எந்த கட்சிக்கும் ஆதரவு தரமாட்டார். அவரது இலக்கு சட்டசபை தேர்தல் தான் என்று ஏற்கனவே நான் கூறிவந்தேன். எனவே ரஜினியின் இந்த அறிவிப்பு எதிர்பார்த்த ஒன்றுதான்.

தமிழகத்தில் பா.ஜ.க- அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தந்தால் தனது செல்வாக்கும், அரசியல் பயணமும் பாதிக்கும் என்பது ரஜினிகாந்துக்கு நன்றாகவே தெரியும்.

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்:-
இந்த அறிவிப்பு எதிர்பார்த்தது தான். தமிழக அரசியல் சிஸ்டத்தை சரிசெய்வதற்கு தெளிவாக அவர் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார். அரசியல் பிரவேசத்துக்கு பிறகு ஒவ்வொரு அடியையும் நுட்பமாக எடுத்து வைக்கிறார். தமிழகத்தின் நலமே பிரதானம் எனும் ரீதியிலேயே தண்ணீர் பிரச்சினையை முன்னிறுத்தி அவர் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Next Story