ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் மாயம் எழும்பூர் ரெயில்வே போலீசில் பரபரப்பு புகார்


ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் மாயம் எழும்பூர் ரெயில்வே போலீசில் பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 17 Feb 2019 9:46 PM GMT (Updated: 17 Feb 2019 9:46 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்த தமிழ்நாடு சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மாயமானது குறித்து எழும்பூர் ரெயில்வே போலீசில் பரபரப்பு புகார் ஒன்று அளிக்கப்பட்டது.

சென்னை,

சென்னையில் இருந்து கடந்த 15-ந் தேதி மதுரை செல்வதற்காக எழும்பூர் ரெயில் நிலையம் வந்த தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலனை காணவில்லை என்று எழும்பூர் ரெயில்வே போலீசாரிடம் தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு சார்பில் நேற்று பர பரப்பு புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டு இருக்கிறது.
அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் கடந்த 15-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையில் பொதுமக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும், போலீஸ் உயர் அதிகாரிகளே இந்த வன்முறைக்கு காரணம் என்பது குறித்து சில ஆதாரங்களை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார். இந்த ஆதாரங்களை வெளியிட்டதினால் தன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று முகிலன் கூறினார்.

அன்று இரவு மதுரைக்கு செல்வதற்காக எழும்பூர் ரெயில் நிலையம் வந்த முகிலனை இன்று(17-ந் தேதி) வரை காணவில்லை. மேலும் அவரது செல்போனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஸ்டெர்லைட் ஆலைக்கு சம்பந்தப்பட்டவர்கள் முகிலனை கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எனவே முகிலனை கண்டுபிடிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story