மாநில செய்திகள்

மறைமுக பேச்சுவார்த்தை தீவிரம் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேருகிறதா? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு + "||" + DMK In the coalition join?

மறைமுக பேச்சுவார்த்தை தீவிரம் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேருகிறதா? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

மறைமுக பேச்சுவார்த்தை தீவிரம் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேருகிறதா? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேருவதற்கான மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை, 

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் வெளியாக உள்ளது. இந்த தேர்தலை சந்திக்கவும், கூட்டணி அமைப்பதிலும் அரசியல் கட்சிகள் மிக தீவிரமாக இறங்கி உள்ளன. யார் யாருடன் இணைய போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தை பற்றிக்கொண்டுள்ளது. பிரதான கட்சியான அ.தி.மு.க. தனது கூட்டணிக்கான வளையத்தை பெரிதாக்கி இருக்கிறது. முதல் கட்டமாக அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. தே.மு.தி.க., பா.ம.க., த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் மறைமுக பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. கூட்டணிக்கான பேச்சுவார்த்தையுடன், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் சேர்ந்தே நடந்து வருகிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க. தனக்கு 25 தொகுதிகளை எடுத்துக்கொண்டு, பா.ஜ.க.வுக்கு 8 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 4 தொகுதிகளும், தே.மு.தி.க.வுக்கு 2 தொகுதிகளும், த.மா.கா.வுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்படுவதற்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

தே.மு.தி.க., பா.ம.க. இடையே தொகுதி எண்ணிக்கையிலும், தொகுதிகள் அடையாளம் காண்பதிலும் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. கொங்கு மண்டல இடங்களை பிரிப்பதில் அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே உடன்பாடு ஏற்படவில்லை என்று தெரிகிறது.

இந்தநிலையில், தி.மு.க.வுடனும் பா.ம.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மிக ரகசியமான முறையில் மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் உள்ளன.

அ.தி.மு.க., தி.மு.க. என மாறி, மாறி கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள பா.ம.க. தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், தினந்தோறும் அக்கட்சி சார்பில் வெளியிடப்படும் அறிக்கையில் அ.தி.மு.க., தி.மு.க. குறித்து காட்டமான வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை. அரசு குறித்து மேலோட்டமான விமர்சனங்களே முன்வைக்கிறது.

பா.ம.க. முடிவை பொறுத்து கூட்டணியை இறுதி செய்ய அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் நினைக்கிறது. இதனால் தான் இரு அணிகளிலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இந்த சூழ்நிலையில், ஒருவேளை தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றால், விடுதலை சிறுத்தைகள் அந்த கூட்டணியில் நீடிக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதேநேரத்தில் தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வர வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அழைப்பு விடுத்து இருக்கின்றன.

பா.ம.க.வை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே அங்கம் வகித்துள்ளது. ஒரே உறையில் 2 கத்திகள் இருக்காது என்று சொல்வார்கள். ஆனால் அரசியலில் எதிரும், புதிருமாக உள்ள பா.ம.க.வும், விடுதலைச்சிறுத்தைகளும் 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த வரலாறும் இருந்திருக்கிறது. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, பகைவனும் இல்லை என்ற வாக்கிற்கேற்ப தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேரும் பட்சத்தில் விடுதலை சிறுத்தைகள் வெளியேறாது என்றே தெரிகிறது.

தற்போதைய சூழ்நிலையில் தி.மு.க. 25 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 8, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்க தி.மு.க. முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வந்தால், காங்கிரசுக்கு ஒதுக்கும் இடங்களில் சிலவற்றை குறைத்து, பா.ம.க.வுக்கு 6 இடங்கள் வரை வழங்கும் என்று தெரிகிறது. தி.மு.க. 23 தொகுதிகளில் போட்டியிடலாம். எது எப்படியிருந்தாலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், இரு அணிகளிலும் கூட்டணி பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு, தொகுதி விவரங்கள் அறிவிக்கப்படும்போது தான் யார்? எந்த அணியில் இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.

அதிகம் வாசிக்கப்பட்டவை