மாநில செய்திகள்

அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்டாக்டர் ராமதாஸ் பேட்டி + "||" + Dr. Ramadoss's interview

அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்டாக்டர் ராமதாஸ் பேட்டி

அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்டாக்டர் ராமதாஸ் பேட்டி
அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சென்னை,

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.-பா.ம.க. இடையே கூட்டணி ஏற்பட்டதை தொடர்ந்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகள் என்னென்ன? என்பது பின்னர் அறிவிக்கப்படும். இந்த கூட்டணி மக்கள் நல கூட்டணி, மெகா வெற்றி கூட்டணி. இந்த வெற்றி கூட்டணிக்கு இதுதான் ஆரம்பம். இது மிகப்பெரிய கூட்டணியாக வளரும், புதுச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளில் இந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

10 கோரிக்கைகள்

அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கு சில கோரிக்கைகள் வைத்துள்ளோம். அந்த வகையில் மக்கள் நலன் மற்றும் தமிழக உரிமைகளை மீட்டெடுக்க 10 கோரிக்கைகள் வைத்துள்ளோம். இந்த கோரிக்கைகள் குறித்து கடிதத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் சமர்ப்பித்து இருக்கிறோம்.

அதன்படி, காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் மற்றும் 20 நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும், தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். 7 தமிழர்களை விடுதலை செய்யவேண்டும். இது முக்கியமான தீர்மானம். இதற்கான முன் முயற்சிகளை அ.தி.மு.க. அரசு எடுத்திருக்கிறது. தனி தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கும் அனுப்பி இருக்கிறார்கள்.

ஆதரவு

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு. 500 மதுக்கடைகளை மூடவேண்டும். படிப்படியாக மணல் குவாரிகள் மூடப்பட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் சதியை முறியடிக்க வேண்டும். பொதுத்துறை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

மேற்கண்ட 10 கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். பொதுவாக மக்கள் நலன் சார்ந்த, தமிழக உரிமைகள் சார்ந்த, உரிமைகளை வென்றெடுக்க கூடிய கோரிக்கைகள் தான் இவை. இந்த கோரிக்கைகளுக்கு அ.தி.மு.க.வும் ஆதரவு கொடுத்திருக்கிறது. அந்த அடிப்படையில் தான் இந்த கூட்டணியை அமைத்திருக்கிறோம்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.