அதிமுக கூட்டணியில் தேமுதிக சேர ஏன் இழுபறி? முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை


அதிமுக கூட்டணியில் தேமுதிக சேர ஏன் இழுபறி? முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை
x
தினத்தந்தி 20 Feb 2019 7:14 AM GMT (Updated: 20 Feb 2019 7:14 AM GMT)

அதிமுக கூட்டணியில் தேமுதிக 10 தொகுதிகளை கேட்பதால் இழுபறி ஏற்பட்டு உள்ளது கூட்டணி தொடர்பாக தேமுதிக முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது.

சென்னை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், அ.தி.மு.க. கூட்டணியில் இதுவரை பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள் என மொத்தம் 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.

தே.மு.தி.க., த.மா.கா. கட்சிகளுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு அதிகாரபூர்வமாக முடிந்த பிறகு, அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.

தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. சார்பில் நேற்று மாலை ரகசியமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தே.மு.தி.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறச் செய்வதற்கான முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ் கோயல் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறுவதில் இழுபறி நிலை நீடிக்கிறது.

விஜயகாந்தை சந்தித்து பேசிய பின் பியூஸ் கோயல் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், விஜயகாந்த் தனது பழைய நண்பர் என்றும், அவரிடம் உடல்நலம் விசாரிக்க வந்ததாகவும் கூறினார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டணி தொடர்பாக தேமுதிக முக்கிய நிர்வாகிகளுடன்  அவசர ஆலோசனை நடைபெறுகிறது. கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சுதீஷ் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பை தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக கூட்டணியில் 10 தொகுதிகளை தேமுதிக கேட்பதால், இழுபறி நிலை நீடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  கள்ளக்குறிச்சி, கடலூர் தொகுதிகளை தேமுதிகவிற்கு கொடுக்க பாஜக வலியுறுத்துவதால் இழுபறி ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story