2 நாள் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகை


2 நாள் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகை
x
தினத்தந்தி 20 Feb 2019 11:45 PM GMT (Updated: 20 Feb 2019 7:40 PM GMT)

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார்.

ஆலந்தூர், 

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று (வியாழக்கிழமை) பகல் 1.45 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்து சேருகிறார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது.

வரவேற்பு முடிந்ததும் காரில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு அவர் செல்கிறார். அங்கு மதிய உணவை முடித்து விட்டு ஓய்வு எடுக்கும் ஜனாதிபதி மாலை 4 மணிக்கு தியாகராய நகரில் உள்ள இந்தி பிரசார சபாவுக்கு செல்கிறார். அங்கு நடக்கும் விழாவில் மகாத்மா காந்தி சிலையை அவர் திறந்து வைக்கிறார்.

விழா முடிந்து மாலை 5 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திரும்புகிறார். கவர்னர் மாளிகை யில் தன்னை சந்திக்க அனுமதி பெற்றவர்களை சந்தித்து பேசுகிறார். கவர்னர் மாளிகையில் ஜனாதிபதி இரவு தங்குகிறார்.

நாளை (வெள்ளிக்கிழமை) கவர்னர் மாளிகையில் இருந்து காலை 8.30 மணிக்கு மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்துக்கு ஜனாதிபதி வருகிறார். அங்கிருந்து காலை 8.40 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் அவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் செல்கிறார்.

அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பகல் 1.45 மணிக்கு சென்னை திரும்புகிறார். பின்னர் பகல் 1.55 மணிக்கு தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். சென்னைக்கு ஜனாதிபதி 2 நாள் பயணமாக வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

Next Story