மெகா கூட்டணி என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும்; கட்சிகள் தாங்களே சொல்லிக்கொள்ள கூடாது - கமல்ஹாசன்


மெகா கூட்டணி என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும்; கட்சிகள் தாங்களே சொல்லிக்கொள்ள கூடாது - கமல்ஹாசன்
x
தினத்தந்தி 21 Feb 2019 11:14 AM GMT (Updated: 21 Feb 2019 11:14 AM GMT)

மெகா கூட்டணி என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும். கட்சிகள் தாங்களே சொல்லிக்கொள்ள கூடாது என கமல்ஹாசன் கூறினார்.

சென்னை,

பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் தனித்து நிற்கும் என கமல்ஹாசன் முடிவு எடுத்து உள்ளார். தேர்தல் களத்தில் கமலின் இந்த முடிவு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஜயகாந்த் சந்தித்த முதல் தேர்தலிலேயே யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக வாக்குகளை பெற்று திரும்பி பார்க்க வைத்ததை போல கமல்ஹாசனும் முத்திரை பதிப்பாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. கமல்ஹாசனை பொறுத்த வரையில், புதிய கட்சியை தொடங்கிய பின்னர் கிராமப்புறங்கள் தொடங்கி, நகர்ப்பகுதிகள் வரையில் பொதுமக்களை சந்தித்து பேசியுள்ளார். இது அவருக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது.

புதிய வாக்காளர்களான இளைஞர்கள் நிச்சயம் மாற்றத்தை விரும்பி, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஓட்டு போடுவார்கள் என்பதே கமலின் நம்பிக்கையாக உள்ளது. இது எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்று தெரியவில்லை.

பாராளுமன்ற தேர்தல் களத்தில் 40 தொகுதிகளிலும் பம்பரமாய் சுழன்று பிரசாரம் செய்ய கமல் திட்டமிட்டுள்ளார்.

இந்த பிரசாரத்தின் போது அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணியை கடுமையாக விமர்சித்து பேசவும் கமல் முடிவு செய்துள்ளார். அ.தி.மு.க., தி.மு.க. 2 கட்சிகளையும் ஊழல் கட்சி என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் கமல், தேர்தல் களத்தில் அதனை வேகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.

விஜயகாந்த் சந்தித்த முதல் தேர்தல் சட்டமன்ற தேர்தல். ஆனால் கமல் சந்திப்பதோ பாராளுமன்ற தேர்தல். மாநில கட்சியாக இருக்கும் மக்கள் நீதி மய்யம், பா.ஜனதா, காங்கிரஸ் கூட்டணிகளை கடுமையாக விமர்சனம் செய்யும் அதே வேளையில் புதிய மாற்றத்துக்காக எங்களை ஆதரியுங்கள். “நாளை நமதே” என்கிற கோ‌ஷத்துடன் பிரசாரம் செய்ய உள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாவது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கட்சி கொடியை ஏற்றி பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:-

மக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் 24ம் தேதிக்கு பிறகு படிப்படியாக வெளியிடப்படும். இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும். கொள்கைகளை பறக்க விட்டுவிட்டு கூட்டணி பேசுகிறார்கள்

மாயவித்தை செய்வோம் என்ற மயக்கும் வார்த்தைகளை நாங்கள் கூறமாட்டோம். மெகா கூட்டணி என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும்; கட்சிகள் தாங்களே சொல்லிக்கொள்ள கூடாது.

மக்கள் நலன் என்பது தான் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள் ஆகும். கொள்கைகளை கட்டுக்கட்டாக புத்தகம் போட்டவர்கள் தற்போது அதை பறக்க விட்டு விட்டனர். கொள்கைகளை பறக்க விட்டுவிட்டு கூட்டணி பேசுகிறார்கள் என கூறினார்.

Next Story