கலாச்சாரம், கடுமையாக உழைக்கும் மக்கள், தொன்மையான வரலாறு ஆகிய சிறப்புகளை கொண்டது தமிழ்நாடு - ராம்நாத் கோவிந்த் புகழாரம்


கலாச்சாரம், கடுமையாக உழைக்கும் மக்கள், தொன்மையான வரலாறு ஆகிய சிறப்புகளை கொண்டது தமிழ்நாடு - ராம்நாத் கோவிந்த் புகழாரம்
x
தினத்தந்தி 21 Feb 2019 1:14 PM GMT (Updated: 21 Feb 2019 1:14 PM GMT)

கலாச்சாரம், கடுமையாக உழைக்கும் மக்கள், தொன்மையான வரலாறு ஆகிய சிறப்புகளை கொண்டது தமிழ்நாடு என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.  அவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பு முடிந்ததும் காரில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு அவர் சென்றார். அங்கு மதிய உணவை முடித்து விட்டு ஓய்வு எடுத்த ஜனாதிபதி மாலை 4 மணிக்கு தியாகராய நகரில் உள்ள இந்தி பிரசார சபாவுக்கு சென்றார். அங்கு நடக்கும் விழாவில் மகாத்மா காந்தி சிலையை அவர் திறந்து வைத்தார்.

சிலையை திறந்து வைத்த பின் ராம்நாத்கோவிந்த் விழாவில் பேசியதாவது:

எனக்கு பிடித்த மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டுக்கு வருவதில் மிக்க மகிழ்ச்சி. தமிழ்நாடு மிக அழகிய மொழி, செம்மையான கலாச்சாரம், திறமையுடன் கடுமையாக உழைக்கும் மக்கள், தொன்மையான வரலாறு ஆகிய சிறப்புகளை கொண்டது. பாரதியார், பெரியார் ஆகியோர் மொழி எல்லைக்குள் நிற்கவில்லை. டெல்லியில் வட இந்திய குழந்தைகள் தமிழ் படிப்பதை பார்த்துள்ளேன். ஒவ்வொரு மாநிலத்திலும் பிற மொழிகளையும் கற்பது இணக்கத்திற்கு உதவும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இன்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நாளை காலை 8.15 மணியளவில், ஹெலிகாப்டர் மூலம் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு சென்று, சுவர்ண பாரதி அறக்கட்டளையின் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.

Next Story