அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரசுக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது


அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரசுக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது
x
தினத்தந்தி 22 Feb 2019 12:00 AM GMT (Updated: 21 Feb 2019 6:40 PM GMT)

அ.தி.மு.க. கூட்டணியில் புதுச்சேரி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

சென்னை,

அ.தி.மு.க. கூட்டணியில் புதுச்சேரி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதற் கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசியல் களம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கூட்டணி, தொகுதி பங்கீடு என அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதான கட்சியான அ.தி.மு.க. தனது அணியில் பா.ஜ.க., பா.ம.க. ஆகிய கட்சிகளை கூட்டணியாக இணைத்து கொண்டுள்ளது.

பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும் அ.தி.மு.க. கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது தே.மு.தி.க., தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தே.மு.தி.க.வுடன் 2 கட்ட பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது.

தே.மு.தி.க. இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்பதால், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு ஏற்படுவதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வருகிறது.

இதற்கிடையில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு வழங்க திட்டமிடப்பட்டது. இந்தநிலையில் நேற்று மாலை 6.40 மணியளவில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரெங்கசாமி மற்றும் அவருடைய கட்சி நிர்வாகிகள் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்தனர்.

அவர்களை அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்று கட்சியின் கூட்டரங்குக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் அவர்கள் தமிழக அரசியல் நிலவரம், புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து விரிவாக பேசினார்கள். இந்த பேச்சுவார்த்தை சுமார் ½ மணி நேரம் நீடித்தது.

இதைத்தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்குவதாக முடிவு செய்யப்பட்டது. இதற் கான ஒப்பந்தத்தில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

அதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், என்.ஆர்.காங்கிரசும் கூட்டணி அமைத்து புதுச்சேரியில் தேர்தலை சந்திப்பது என்று நல்ல முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, அ.தி.மு.க.வின் தலைமையிலான கூட்டணியில் என்.ஆர். காங்கிரசுக்கு புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

என்.ஆர்.காங்கிரஸ்- அ.தி.மு.க. கூட்டணி உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கும் விரைவில் தொகுதி பங்கீடு முடிய உள்ளது.

தொகுதி உடன்பாடு உறுதியான பிறகு, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வுடன் இணைந்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணி ஒரு வெற்றி கூட்டணி, வலுவான கூட்டணி. 40 தொகுதியிலும் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா இருந்த காலத்தில் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளோம். அதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவோம். அவர்கள் நிபந்தனைகள் எதுவும் விதிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story