கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வருமாறு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக அழைப்பு


கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வருமாறு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக அழைப்பு
x
தினத்தந்தி 22 Feb 2019 4:48 AM GMT (Updated: 22 Feb 2019 4:48 AM GMT)

கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வருமாறு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்து உள்ளது.

சென்னை

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. தலைமையில் ஓர் அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட இருக்கின்றன.

கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக இரு அணிகளில் உள்ள கட்சிகள் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தி.மு.க. சார்பில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தின. அது போல் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் அப்துல் சமது உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று மாலை தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார்கள்.

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களுக்கு 2 தொகுதிகள் வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளை தர வேண்டும் என்று அக்கட்சி தி.மு.க.விடம் கேட்டு உள்ளது.

கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வருமாறு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்து உள்ளது. இன்று மதியம் அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

கருணாநிதி இருந்த போது 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளையும், 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம், திருவள்ளூர் தொகுதிகளையும் விடுதலை சிறுத்தைகள் பெற்றிருந்தது. இதில் 2014-ம் ஆண்டு தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

கடந்த காலங்களில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டது போலவே, இந்த முறையும் 2 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தைகளின் விருப்பமாக உள்ளது. ஆனால், ஒரு தொகுதி மட்டுமே தர முடியும் என்று தி.மு.க. தரப்பில் கூறப்படுவதாக தெரிகிறது .

Next Story