தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சந்திப்பு


தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சந்திப்பு
x
தினத்தந்தி 22 Feb 2019 8:01 AM GMT (Updated: 22 Feb 2019 8:01 AM GMT)

தேமுதிக தலைவர் விஜயகாந்தை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

சென்னை,

தேமுதிக கட்சி தலைவரும், தமிழகத்தின் முன்னாள் எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்றார். விஜயகாந்த்  சிகிச்சை முடிந்து கடந்த 16 ந்தேதி சென்னை திரும்பினார். அ.தி.மு.க - பாஜக கூட்டணியில் தேமுதிக இணையப்போவதாக கூறப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து  கட்சி நிர்வாகிகள் விஜயகாந்துடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.  அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுவதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வருகிறது. 

இந்த சூழலில், நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அரசியல் குறித்து பேசியதாகவும் திருநாவுக்கரசர் கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு வந்த ரஜினிகாந்த், அவரிடம் உடல் நலம் விசாரித்தார். சந்திப்பின் போது விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன் விஜயபிரபாகர் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு 15 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்புக்கு பிறகு பேட்டி அளித்த ரஜினிகாந்த், அரசியல் எதுவும் பேசவில்லை என்றார். 

இந்த நிலையில்,  விஜயகாந்தை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சந்தித்து பேசினார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த இல்லத்தில் அவரை சந்தித்து பேசிய மு.க ஸ்டாலின், உடல்நலம் குறித்து விசாரித்தார்.  பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், மு.க ஸ்டாலின்  சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

Next Story