மாற்றம்-ஏமாற்றம்-சூட்கேஸ் அ.தி.மு.க- பாமக கூட்டணி குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்


மாற்றம்-ஏமாற்றம்-சூட்கேஸ் அ.தி.மு.க- பாமக கூட்டணி குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்
x
தினத்தந்தி 22 Feb 2019 8:42 AM GMT (Updated: 22 Feb 2019 8:42 AM GMT)

மாற்றம்-ஏமாற்றம்-சூட்கேஸ் மணி என அன்புமணி குறித்து விமர்சித்த ஸ்டாலின், அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்து அதிமுக ஒரு திராவிட கட்சியே இல்லை என ராமதாஸ் நிரூபித்திருப்பதாகவும் சாடினார்.

சென்னை

சென்னையை அடுத்த திருவேற்காட்டில், எம்.எல்.ஏ. சுதர்சனம் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். திருமணத்தை நடத்தி வைத்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

சுதர்சனம் மாம்பழத் தொழில் செய்து வருகிறார். ஆனால் சிலர் மாம்பழ சின்னத்தை வைத்துக்கொண்டு எப்படியோ வருமானம் ஈட்டுகின்றனர் என்று பாமகவை சாடினார்.

திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறிவந்த ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதன் மூலம், அக்கட்சி திராவிட இயக்கத்தை சேர்ந்தது இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார.  மாற்றம்-முன்னேற்றம்-அன்புமணி என முழக்கம் வைத்தவர்கள், இனி மாற்றம்-ஏமாற்றம்-சூட்கேஸ்மணி என்றுதான் கூறிக்கொள்ள வேண்டும். அதிமுக-பாமக கூட்டணி, மக்கள் விரோத கூட்டணி, பண நலனுக்கான கூட்டணி.

தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் கடல் தாண்டி புகழ் கொடி நாட்டினார்கள். ஆனால் இப்போது நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியில் கடல் தாண்டி ஊழல் செய்துள்ளதை பார்க்கிறோம்.

அமெரிக்க நிறுவனமான காக்னிசென்ட் நிறுவனம் சிறுசேரியில் ஒரு கட்டிடம் கட்ட இந்த ஆட்சியில் அனுமதி கேட்டனர். இதற்கு ரூ.26 கோடி லஞ்சம் கொடுத்ததாக அந்த நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளது.

இப்படி பணம் கொடுத்தது தவறு என்று அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

எனவே இதுபற்றி முறையாக விசாரணை நடத்த சி.பி.ஐ.யிடம் புகார் கொடுத்துள்ளோம். 1 வாரம் பொறுத்திருப்போம். இதில் நடவடிக்கை இல்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என கூறினார்.

Next Story