தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. சேருமா? விஜயகாந்துடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு


தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. சேருமா? விஜயகாந்துடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Feb 2019 12:15 AM GMT (Updated: 22 Feb 2019 6:49 PM GMT)

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசியதால், தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேருமா? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப் பாக பேசப்படுகிறது.

சென்னை, 

தமிழகத்தில், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும், எதிர்க்கட்சியான தி.மு.க.வும் தயாராகி வருகின்றன.

இரு கட்சிகளுமே கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும், என்.ஆர். காங்கிரசுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளன. மேலும், தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதேபோல், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

கூட்டணிகள் ஓரளவு உறுதி யான போதிலும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலை நீடித்து வருகிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது தே.மு.தி.க. வுக்கு பிடிக்கவில்லை. வட மாவட்டங்களில் மட்டும் செல்வாக்கு உள்ள பா.ம.க. வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்படும் போது, தமிழகம் முழுவதும் பரவலாக வாக்கு வங்கி வைத்திருக்கும் தங்களுக்கு அதைவிட கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று தே.மு.தி.க. வலியுறுத்தி வருகிறது.

மேலும், பா.ம.க. வலுவாக உள்ள வட மாவட்டங்களில் தங்களுக்கு தொகுதிகள் வேண்டாம் என்ற கோரிக்கையையும் தே.மு.தி.க. முன்வைக்கிறது. இதனால், அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதில் இழுபறி நிலை நீடித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் நேற்று முன்தினம் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்தை சந்தித்து தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின்போது அவர் அரசியல் குறித்து பேசியதையும் ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில், நேற்று காலை 11 மணி அளவில் விஜயகாந்தை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

அப்போது, நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பேசியதாகவும் தெரிகிறது. தமிழகத்தில் தே.மு.தி.க. வலுவான கட்சியாக இருந்தது முதல் தற்போதைய நிலை வரை உள்ள சூழ்நிலைகளை எடுத்துச் சொல்லி, நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நல்ல முடிவை எடுக்குமாறு விஜயகாந்திடம் ரஜினிகாந்த் நட்பு ரீதியில் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்தை சந்திப்பதற்காக மதியம் 1.20 மணிக்கு சாலி கிராமத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு வந்தார். அவருடன் மா.சுப்பிரமணியன் எம்.எல். ஏ.வும் வந்தார். அவர்களை தே.மு.தி.க. துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் வரவேற்று அழைத்துச் சென்றார். விஜயகாந்துடன் மு.க.ஸ்டாலின் 20 நிமிடங்கள் பேசினார்.

அப்போது, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முதலில், விஜயகாந்திடம் அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்த மு.க.ஸ்டாலின், பின்னர் கூட்டணி குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது, தி.மு.க. கூட்டணிக்கு தே.மு. தி.க. வந்தால் 3 தொகுதிகள் வரை தருவதாக தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், தே.மு.தி.க. தரப்பில் 7 தொகுதிகளும், ஒரு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. எனவே, தி.மு.க. தரப்பிடம் தொடர்ந்து பேச எல்.கே.சுதீஷ் செல்வார் என்று கூறப்படுகிறது.

விஜயகாந்தை மு.க.ஸ்டாலின் திடீரென்று சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜயகாந்தை சந்தித்து விட்டு வெளியே வந்த மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

விஜயகாந்த் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுவிட்டு, தற்போது சிகிச்சை முடிவுற்று சென்னைக்கு திரும்பி இருக்கிறார். எனவே, அவரது உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக அவரை சந்தித்தேன். நான் அவரோடு நீண்டநாட்களாக நண்பராக பழகிக் கொண்டிருக்கிறவன். அவரை விட ஒரு வயது குறைந்தவனாக இருந்தாலும், என்னை அவர் மரியாதையுடன் அண்ணன் என்று தான் அன்போடு தொடர்ந்து அழைத்துக் கொண்டு இருக்கிறார்.

அதையும் தாண்டி, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது அளவு கடந்த பாசமும், அன்பும், பக்தியும் கொண்டிருந்தார் என்று சொன்னால் அது மிகை ஆகாது. கருணாநிதி மறைந்த போது விஜயகாந்த் வெளிநாட்டில் இருந்தார். வெளிநாட்டில் இருந்து வீடியோ மூலமாக இரங்கல் செய்தியை கூறும்போது, தாங்க முடியாத அளவு சோகத்தில் மூழ்கி அவர் அழுத காட்சி இன்றும் நம்முடைய மனதில் நிழலாடிக் கொண்டு இருக்கிறது.

கருணாநிதி மறைவின்போது வெளிநாட்டில் இருந்த காரணத்தால் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்த முடியாத நிலையில், சிகிச்சை முடிந்து இந்தியா வந்த பிறகு விமான நிலையத்தில் இருந்து நேரடியாக கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தியதன் மூலம், உள்ளபடியே அவர் கருணாநிதி மீது எந்த அளவு பக்தி வைத்து இருந்தார் என்பதை நன்றாக புரிந்துகொள்ள முடியும். விஜயகாந்த் நல்லபடியாக தேறி வந்து இருக்கிறார். அவர் இன்னும் ஆரோக்கியமாக வாழ்ந்து நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் பாடுபட வேண்டும், பணியாற்றிட வேண்டும் என்று என்னுடைய வாழ்த்துகளை தி.மு.க. சார்பில் தெரிவித்துவிட்டு வந்து உள்ளேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

அதைத்தொடர்ந்து நிருபர் கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- கூட்டணி குறித்து ஏதாவது பேசினீர்களா?.

பதில்:- அரசியல் பேச நான் வரவில்லை. உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக ஒரு மனிதாபிமானத்தோடு அவரை சந்தித்தேனே தவிர, நீங்கள் எதிர்பார்ப்பது போன்று அந்த சந்திப்பு இல்லை.

கேள்வி:- உங்கள் கூட்டணிக்கு தே.மு.தி.க. வந்தால் வரவேற்பீர்களா?.

பதில்:- உங்கள் நல்ல எண்ணத்துக்கு எனது பாராட்டுகள். நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story