மாநில செய்திகள்

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் தலைவர்கள் கோரிக்கை + "||" + The parliamentary elections should be held in a single phase

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் தலைவர்கள் கோரிக்கை

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் தலைவர்கள் கோரிக்கை
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சென்னை, 

தமிழகத்தில் கடந்த ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம், நீக்கம், இடமாற்றம் போன்றவற்றுக்காக தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன.

இதுவரை பட்டியலில் இடம் பெறாதவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன. காலை 9.30 மணியில் இருந்து மாலை 5.30 மணிவரை வாக்குச்சாவடி அளவில் நடக்கும் இந்த முகாம்களில் 18 வயது நிரம்பி, இதுவரை பட்டியலில் இடம் பெறாத வாக்காளர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சத்யபிரத சாகு கூறி உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான நடவடிக்கைகளை தொடங்கும் நிலையில் அரசியல் கட்சிகளோடு பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை செய்வது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் வாக்குச்சாவடி அளவிலான முகவர்களின் ஒத்துழைப்பு, தேர்தல் கமிஷனுக்கு அவசிய தேவையாக உள்ளது.

எனவே இதுதொடர்பாக கூட்டம் நடத்துவதற்கு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் சத்யபிரத சாகு அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று பகல் 12 மணிக்கு தொடங்கியது.

இதில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளான பா.ஜ.க. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மாநில கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய 9 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அ.தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், இன்பதுரை, தி.மு.க. சார்பில் கிரிராஜன், தே.மு.தி.க. சார்பில் மோகன்ராஜ், இளங்கோவன், பா.ஜ.க. சார்பில் சவுந்திரராஜன், ஜெய்சங்கர், காங்கிரஸ் சார்பில் தாமோதரன், கிருஷ்ணமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பெரியசாமி, ஏழுமலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஆறுமுகநாயனார், உதயகுமார், மற்றும் தேசியவாத காங்கிரஸ் சாரதி, அபுபக்கர், பகுஜன் சமாஜ் மாணிக்கராஜ், பாரதிதாசன் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

சுமார் 2 மணி நேரம் இந்த கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் நிருபர்களுக்கு கட்சியினர் பேட்டி அளித்தனர். அதன் விவரம் வருமாறு:-

பொள்ளாச்சி ஜெயராமன் (அ.தி.மு.க.):- தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். மற்ற அரசியல் கட்சியினரும் இதே கருத்தை வலியுறுத்தினர். குடிநீர் வழங்குதல் போன்ற அத்தியாவசிய பணிகளை தேர்தலை காரணம் காட்டி தடை செய்யக்கூடாது என்று கோரியிருக்கிறோம்.

தேர்தல் பணியில் அனைத்து தரப்பு அரசு ஊழியர்களையும் பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளோம். ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும் என்பதால், கூட்டுறவு துறை ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம பஞ்சாயத்து செயலாளர்கள் போன்றவர்களையும் தேர்தல் பணியில் பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளோம். எங்கள் கோரிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி, அதற்கான வாய்ப்பு பற்றி தெரிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறி உள்ளார்.

கிரிராஜன் (தி.மு.க.):- தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் உள்ள பல்வேறு குளறுபடிகளை தி.மு.க. சார்பில் சுட்டிக்காட்டினோம். உதாரணமாக, ஆர்.கே.நகர் பகுதியில் 15 பாகங்களில் வாக்காளர் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவாகியிருப்பது இன்னும் உள்ளது. அதற்கான ஆவணங்களை தேர்தல் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளோம். இந்த பிரச்சினை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

சென்னையில் இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஒரு நகல் வழங்க கூறியுள்ளார். மற்ற மாவட்டங்களிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் இருக்கும்பட்சத்தில் மனுவாக அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். சென்னையில் வாக்காளர் பட்டியலில் 38 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர். அது முறையாக நடைபெறவில்லை. ஏற்கனவே ஆர்.கே.நகர் பகுதியில் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் பெயர் நீக்கம் செய்த பிறகு, மீண்டும் வாக்காளர் பட்டியலில் அந்த பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த தவறுகளையெல்லாம் சுட்டிக்காட்டினோம். தேர்தலுக்கு முன்பு அனைத்து தவறுகளையும் சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.

பெரியசாமி (இந்திய கம்யூனிஸ்டு):- வருகிற மக்களவை தேர்தலை சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும், தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேக நிழல் விழாமலும் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். தமிழ்நாட்டில் முதல்கட்டமாக ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும். நாடாளுமன்ற தேர்தலோடு, தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையும் சேர்த்து நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம்.

வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும். வாக்குச்சாவடி அளவில் உள்ள திருத்தங்களை, நீக்கப்பட வேண்டிய பெயர்களை முறையாக பரிசீலித்து திருத்தம் செய்து வெளியிடுவதில்லை. அந்த குறைபாடுகளை சரி செய்ய வேண்டும். வெயில் காலத்தில் தேர்தல் நடப்பதால் குடிநீர், பந்தல் வசதி செய்து தர வேண்டும். புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.

நவீன வசதிகளை அறிமுகப்படுத்தினாலும், தேர்தல் நேரத்தில் அந்த வசதிகள் சரிவர வேலை செய்வதில்லை என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறோம்.

இளங்கோவன் (தே.மு.தி.க.):- தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்கள் பெயர் இருப்பது இன்னும் நீடிக்கிறது. தேர்தலுக்கு முன் அதை நீக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்த 32 ஆயிரம் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணத்தை விளக்க வேண்டும்.

வாக்காளர் சேர்ப்பு பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது. தனியார் ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும். வாக்காளர் பெயர் சேர்ப்புக்கு இன்னும் கூடுதல் முகாம்கள் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை