தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு


தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 22 Feb 2019 11:00 PM GMT (Updated: 22 Feb 2019 7:00 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடனான கூட்டணி உடன்பாடு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அப்போது, தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் உள்பட தி.மு.க. நிர்வாகிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.எல்.ஏ. முகமது அபுபக்கர் உள்பட கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

இந்த கூட்டணி ஒப்பந்தத்தின்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த தேர்தலில் ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கூட்டணி ஒப்பந்தம் முடிந்து வெளியில் வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியையும் இடம் பெற செய்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். வருகிற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றிபெற எல்லா வகையிலும் பாடுபட வேண்டும் என்ற முடிவை நாங்கள் எடுத்து இருக்கிறோம்.

எங்களுக்கு தேவைப்பட்ட தொகுதிகளில் முன்பு நாங்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற, போட்டியிட்ட தொகுதிகளின் பட்டியலை தெரிவித்தோம். அப்போது, இன்றைய சூழ்நிலையில் பல்வேறு கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்க வேண்டியது உள்ளதால், ஒரு தொகுதியோடு நீங்கள் திருப்தி அடைய வேண்டும் என்று எங்களிடம் சொன்னார்கள். அதை நாங்கள் முழுமனதாக ஏற்றுக்கொண்டு அதற்கு கையெழுத்திட்டு எங்கள் ஒப்புதலை அளித்துள்ளோம்.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்கித் தந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், துரைமுருகன் தலைமையிலான தொகுதி பங்கீட்டுக் குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நாங்கள் அளித்துள்ள பட்டியலில் இருந்து எங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதியை அவர்கள் விரைவில் அறிவிப்பார்கள். தமிழகத்தில் உள்ள சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம்கள் மட்டும் அல்ல, சிறுபான்மை சமூகத்தினர் அத்தனை பேருமே பா.ஜனதா இணைந்துள்ள அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்கமாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story