கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை: 4 தொகுதிகளை எதிர்பார்க்கும் ம.தி.மு.க.; ஒற்றை விரலை காட்டும் தி.மு.க.


கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை: 4 தொகுதிகளை எதிர்பார்க்கும் ம.தி.மு.க.; ஒற்றை விரலை காட்டும் தி.மு.க.
x
தினத்தந்தி 22 Feb 2019 10:45 PM GMT (Updated: 22 Feb 2019 7:03 PM GMT)

தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது

சென்னை, 

தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. இதில் 4 தொகுதிகளை ம.தி.மு.க. முன்வைத்துள்ள நிலையில், ஒரு தொகுதியை மட்டும் வழங்க தி.மு.க. முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தி.மு.க. கூட்டணி

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தயாராகி வருகிறது. பா.ஜ.க., பா.ம.க. ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்துள்ள அ.தி.மு.க. அடுத்ததாக, தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

தி.மு.க.வும் முதல்கட்டமாக காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கியது. அடுத்தபடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடுக்கான பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறது.

4 தொகுதிகள் கேட்கும் ம.தி.மு.க.

இந்த கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியை ஒதுக்க தி.மு.க. திட்டமிட்டு இருக்கிறது. ஆனால் இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் தங்களுக்கு குறைந்தபட்சம் தலா 2 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. ம.தி.மு.க. தென்சென்னை, தென்காசி, திருச்சி, ஈரோடு ஆகிய 4 தொகுதிகளை கேட்டு முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி குழுவினர் பட்டியலை தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கினர்.

கடந்த காலங்களில் ம.தி.மு.க. 5 தொகுதிகளில் போட்டியிட்டு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்றிருந்தது. இடையில் அக்கட்சி அங்கீகாரத்தை இழந்ததால் பம்பரம் சின்னம் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டது. எனவே குறைந்தது 4 தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே ம.தி.மு.க. மீண்டும் பம்பரம் சின்னத்தை பெறமுடியும் என்பதால், அதில் உறுதியாக இருக்கிறது. ஆனால் தி.மு.க. தரப்போ ஒற்றை விரலை மட்டும் காட்டுகிறது.

திருமாவளவன் பேச்சுவார்த்தை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் ஆகியோரும் தி.மு.க. குழுவுடன் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அவர்கள் விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளை எதிர்பார்க்க, சிதம்பரம் தொகுதியை மட்டும் வழங்குவதாக தி.மு.க. தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் திருமாவளவன் கூறும்போது, ‘பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கிறது. தொடர்ந்து நாங்கள் பேச இருக்கிறோம்’ என்றார். மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளும் தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Next Story