சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 42 பேருக்கு குரூப்-1 பணிகளுக்கான நியமன ஆணை அரசு பணியாளர் தேர்வாணையம் வழங்கியது


சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 42 பேருக்கு குரூப்-1 பணிகளுக்கான நியமன ஆணை அரசு பணியாளர் தேர்வாணையம் வழங்கியது
x
தினத்தந்தி 22 Feb 2019 10:30 PM GMT (Updated: 22 Feb 2019 7:29 PM GMT)

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 பணிகளுக்கான பணி நியமன ஆணை, சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 42 பேருக்கு வழங்கப்பட்டது.

சென்னை,

தமிழக அரசுத் துறையில் துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., வணிக வரித்துறை உதவி கமிஷனர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் மாவட்ட அதிகாரி ஆகிய பதவிகளுக்கான 85 மொத்த காலிப்பணி இடங்களுக்கான குருப்-1 தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி வெளியிட்டது.

இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந்தேதி முதல்நிலை தேர்வும், அக்டோபர் மாதம் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை முதன்மை எழுத்துத்தேர்வும் நடைபெற்றது. இந்த தேர்வில் கலந்து கொள்ள மனிதநேய மையத்தில் சேர்ந்தவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்பட்டது.

எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதி மற்றும் அப்பதவிகளுக்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு தற்காலிகமாக 176 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்கள் நேர்முகத் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து மனிதநேய மையத்தின் சார்பில் கடந்த 3-ந்தேதி முதல் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டன.

இந்தநிலையில் நேர்முகத்தேர்வின் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. பின்னர் கலந்தாய்வு மற்றும் காலி பணி இடங்களுக்கான நியமன ஆணைகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதில் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற 42 பேர் தேர்வாகி உள்ளனர். இவர்களில் 10 பெண்கள் உள்பட 13 பேர் துணை கலெக்டர், 7 பெண்கள் உள்பட 17 பேர் போலீஸ் டி.எஸ்.பி., 4 பெண்கள் உள்பட 5 பேர் வணிக வரித்துறை உதவி கமிஷனர், 2 பெண்கள் உள்பட 3 பேர் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, 3 பெண்கள் உள்பட 4 பேர் மாவட்ட தீயணைப்பு அதிகாரி பதவிக்கு தேர்வாகினர்.

இவர்களுக்கு தேர்வாணைய அலுவலகத்தில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவலை மனிதநேய மையத்தின் தலைவர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

Next Story