விஜயகாந்துடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு துளிகூட அரசியல் பேசவில்லை என்று பேட்டி


விஜயகாந்துடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு துளிகூட அரசியல் பேசவில்லை என்று பேட்டி
x
தினத்தந்தி 22 Feb 2019 11:30 PM GMT (Updated: 22 Feb 2019 7:36 PM GMT)

கூட்டணி பேச்சு வார்த்தையில் இழுபறி நிலை நீடிக்கும் சூழ்நிலையில் விஜயகாந்தை நடிகர் ரஜினிகாந்த் திடீரென நேற்று சந்தித்து பேசினார்.

சென்னை, 

கூட்டணி பேச்சு வார்த்தையில் இழுபறி நிலை நீடிக்கும் சூழ்நிலையில் விஜயகாந்தை நடிகர் ரஜினிகாந்த் திடீரென நேற்று சந்தித்து பேசினார். ஆனால், இந்த சந்திப்பில் துளிகூட அரசியல் பேசவில்லை என்று அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி மக்கள் மன்றம் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவு கிடையாது என்றும் நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்துவிட்டார். 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து நடிகர் ரஜினிகாந்த் செயல்பட்டாலும், குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் வாக்களியுங்கள் என்று அவர் யோசனையும் தெரிவித்துள்ளார்.

என்றாலும், குறிப்பிட்ட கட்சியை அவர் அடையாளம் காட்டுவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், நேற்று காலை 11 மணியளவில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் திடீரென வந்தார். அவரை தே.மு.தி.க. துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்.

விஜயகாந்தை சந்தித்த ரஜினிகாந்த் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர், சற்று நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மைத்துனர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ஏற்கனவே, அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே கூட்டணி பேச்சு வார்த்தை இழுபறி நிலை நீடித்து வருவதால், அதை சாதகமாக்கிக் கொள்ள தி.மு.க. முயற்சி மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் நேற்று முன்தினம் விஜயகாந்தை சந்தித்து கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில் தான் நேற்று நடிகர் ரஜினிகாந்த் வந்து விஜயகாந்தை சந்தித்துள்ளார். அவரை அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க. தூது அனுப்பியதா? என்ற கேள்வியும் அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழாமல் இல்லை. எனவே, நடிகர் ரஜினிகாந்த் அரசியல் குறித்தும் விஜயகாந்துடன் பேசியிருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதை ரஜினிகாந்த் மறுத்துவிட்டார்.

விஜயகாந்துடனான சந்திப்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

நண்பர் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தேன். நான் அமெரிக்காவில் இருக்கும்போதே அவரை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால், அங்கே சந்திக்க முடியவில்லை. நான் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது என்னை பார்க்க வந்த முதல் ஆள் விஜயகாந்த். நான் சிங்கப்பூரில் இருந்து வந்த போதுகூட தொலைபேசியில் முதன் முதலாக அழைத்து, “உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறியவர் விஜயகாந்த்.

அவர் இப்போது அமெரிக்கா போய்விட்டு நல்ல ஆரோக்கியமாக வந்திருக்கிறார். அவரை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. அவர் நல்ல மனிதர். அவர் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன். இந்த சந்திப்பில் துளிகூட அரசியல் கிடையாது. என்னுடைய அரசியல் நிலைப்பாட்டை நான் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். அதற்கு அப்புறம் இப்போது நான் ஒன்றுமே பேசுவது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story