தடுப்புச்சுவரில் கார் மோதல் அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் மரணம் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி


தடுப்புச்சுவரில் கார் மோதல் அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் மரணம் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி
x
தினத்தந்தி 24 Feb 2019 12:15 AM GMT (Updated: 23 Feb 2019 10:43 PM GMT)

திண்டிவனத்தில் தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் பலியானார். அவர் உடலுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.

திண்டிவனம், 

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தவர் ராஜேந்திரன் (வயது 63). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

தடுப்புச்சுவரில் கார் மோதல்

நேற்று முன்தினம் இரவு தைலாபுரத்தில் உள்ள பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் இல்லத்தில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர், துணை முதல்- அமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் ராஜேந்திரன் எம்.பி.யும் கலந்து கொண்டார். விருந்து முடிந்ததும் அவர் அங்கிருந்து புறப்பட்டு திண்டிவனம் ஜக்காம்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு வந்து அங்கு தங்கி ஓய்வு எடுத்தார்.

நேற்று காலை 6 மணியளவில் அவர், சுற்றுலா மாளிகையில் இருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டார். காரை விழுப்புரம் அருகே அய்யூர் அகரத்தை சேர்ந்த அருணாச்சலம் மகன் அருமைச்செல்வம் (24) என்பவர் ஓட்டினார். காரில் ராஜேந்திரன் எம்.பி. யுடன் அவரது உறவினரான வானூர் தாலுகா ஆதனப்பட்டை சேர்ந்த தமிழ்செல்வனும் (46) சென்றார்.

இவர்களது கார், திண்டி வனம்-மயிலம் சாலையில் சென்று கொண்டிருந்தது. திண்டிவனம் போலீஸ் நிலையம் அருகே சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர் பாராதவிதமாக சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது.

ராஜேந்திரன் எம்.பி. பலி

இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த ராஜேந்திரன் எம்.பி. மற்றும் காரில் இருந்த தமிழ்செல்வன், டிரைவர் அருமைச்செல்வம் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் எம்.பி. உள்ளிட்ட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராஜேந்திரன் எம்.பி.யை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பலத்த காயமடைந்த தமிழ்செல்வன், அருமைச்செல்வம் ஆகிய இருவருக்கும் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக் காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்-அமைச்சர் அஞ்சலி

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் அமைச்சர் சி.வி. சண்முகம், திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று ராஜேந்திரன் எம்.பி.யின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதற்கிடையே விபத்தில் ராஜேந்திரன் எம்.பி. மரணம் அடைந்த செய்தியை கேட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னையில் இருந்து கார் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு காலை 11.30 மணியளவில் வந்தனர். அங்கு ராஜேந்திரன் எம்.பி.யின் உடலுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.

இவர்களுடன் அமைச்சர்கள் சரோஜா, பெஞ்சமின், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, மோகன், எம்.பி.க்கள் லட்சுமணன், ஏழுமலை, எம்.எல்.ஏ.க்கள் குமரகுரு, சக்கரபாணி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, திண்டிவனம் சப்-கலெக்டர் மெர்சி ரம்யா ஆகியோரும் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சென்று ராஜேந்திரன் எம்.பி.யின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் இருந்து அவரது சொந்த ஊரான ஆதனப்பட்டு கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., மாநில தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் ஆதனப்பட்டு கிராமத்திற்கு நேரில் சென்று அங்கு ராஜேந்திரன் எம்.பி.யின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

ராஜேந்திரன் எம்.பி.யின் உடல் அடக்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

குடும்பம்

விபத்தில் பலியான ராஜேந்திரன் எம்.பி.யின் சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா ஆதனப்பட்டு கிராமமாகும். இவர் கடந்த 1.6.1956 அன்று பிறந்தார். இவருடைய தந்தை சுப்பு ராயன், தாய் பாக்கியம். விவசாய குடும்பத்தை சேர்ந்த அவர், பி.லிட். படித்துள்ளார்.

இவருக்கு சாந்தா (50) என்ற மனைவியும், திவ்யா (26), தீபிகா (24) என்ற 2 மகள்களும், விக்னேஸ்வரன் (22) என்ற ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் சாந்தா சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாகவும், திவ்யா, தீபிகா ஆகிய இருவரும் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தற்காலிக ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். விக்னேஸ்வரன் சிவில் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு கட்டிட ஒப்பந்ததாரராக உள்ளார்.

கட்சி பணி

அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆர். மீது இருந்த பற்று காரணமாக இளவயதில் இருந்து அ.தி.மு.க.வில் சேர்ந்து பணியாற்றினார். கட்சியில் மாவட்ட அளவில் பல்வேறு பதவிகளை வகித்த ராஜேந்திரன், தற்போது வரை அ.தி.மு.க. வடக்கு மாவட்ட விவசாய பிரிவு செயலாளராகவும் இருந்து வந்தார்.

மேலும் கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராக இருந்த ராஜேந்திரன், 2011-ம் ஆண்டு முதல் மாவட்ட ஊராட்சி கவுன்சிலராக இருந்தார். 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அப்போதைய முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதா, விழுப்புரம் நாடாளுமன்ற (தனி) தொகுதி வேட்பாளராக ராஜேந்திரனை அறிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி

இதையடுத்து ராஜேந்திரன், தான் வகித்து வந்த மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவியை, ராஜினாமா செய்துவிட்டு விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் முத்தையனைவிட கூடுதலாக 1,93,367 ஓட்டுகள் பெற்று வெற்றிபெற்றார்.

ஓட்டு விவரம்

மொத்த ஓட்டு - 13,68,335

பதிவான ஓட்டு - 10,64,843

ராஜேந்திரன் (அ.தி.மு.க.) - 4,82,704

முத்தையன் (தி.மு.க.) - 2,89,337

உமாசங்கர் (தே.மு.தி.க.) - 2,09663

ராணி (காங்கிரஸ்) - 21,461


காரில் புறப்பட்ட 5 நிமிடத்திலேயே விபத்தில் சிக்கி இறந்த எம்.பி.

சென்னை செல்வதற்காக ராஜேந்திரன் எம்.பி., காலை 6 மணியளவில் திண்டிவனம் ஜக்காம்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டார். புறப்பட்ட 5 நிமிடத்தில் திண்டிவனம்-மயிலம் சாலையில் கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவர் மீது கண் இமைக்கும் நேரத்தில் கார் திடீரென மோதியது.

இந்த விபத்தில் சிக்கிய ராஜேந்திரன் எம்.பி. பரிதாபமாக உயிரிழந்தார். அவர் ‘ஷீட்பெல்ட்’ அணியாமல் பயணம் செய்ததால் உயிரிழந்தது தெரியவந்தது.

விபத்து நடந்தது எப்படி?

திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சென்னை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பான ஜக்காம்பேட்டை வரை சாலையை அகலப்படுத்தியதோடு, சாலையின் நடுவில் 5 அடி உயரத்திற்கு கான்கிரீட்டால் ஆன தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. இதில் மேம்பாலம் ஆரம்பமாகும் இடத்தில் (டவுன் போலீஸ் நிலையம் வரை) பணிகள் முடிவடைந்து விட்டது. மீதம் உள்ள சாலையில் (ஜக்காம்பேட்டை வரை) பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது சுமார் 50 மீட்டர் தொலைவிற்கு சாலையின் நடுவில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நடந்துள்ளது. பணிகள் நடைபெறும் இந்த பகுதியில் சாலை மற்றும் போலீஸ் நிலையம் எதிரில் கடந்த வாரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்பட்டும் இருபுறமும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ராஜேந்திரன் எம்.பி.யின் கார் விபத்துக்குள்ளான இடத்தில் சிறிய பாலம் வேலை நடைபெறுகின்றது. இந்த குறுகலான இடத்தில் பணிகள் நடைபெறுவதற்கான எந்த விதமான அறிவிப்பு பலகையும், பேரிகார்டும் வைக்கப்படவில்லை. அதோடு அப்பகுதியில் மின்விளக்குகளும் இல்லை. இந்த பணிகள் நடைபெறும் இடத்தின் அருகிலேயே போலீஸ் நிலையம் இருந்தும் விபத்துகளை தடுக்க போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனாலேயே சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த ராஜேந்திரன் எம்.பி. சென்ற கார் நேற்று காலை தடுப்புச்சுவரில் மோதியதால், இந்த உயிரிழப்பு நடந்துள்ளது.

Next Story