21 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் : முதல்-அமைச்சர் தகவல்


21 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் : முதல்-அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 25 Feb 2019 11:43 PM GMT (Updated: 25 Feb 2019 11:43 PM GMT)

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்பட 21 சட்டசபை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் நடைபெறும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தர்மபுரி, 

தர்மபுரி மாவட்டம் அரூரில் நேற்று இரவு அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்பட 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெற வேண்டும். இதற்காக அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப பா.ம.க.வை இணைத்துள்ளோம். 2-வது பா.ஜனதாவை இணைத்துள்ளோம்.

இன்னும் சில கட்சிகள் கூட்டணிக்கு வர உள்ளன. இது ஒரு மெகா கூட்டணி. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எப்படி கூட்டணி அமைத்தார்களோ, அதே வழியில் சிறந்த கூட்டணி அமைத்துள்ளோம். அ.தி.மு.க., பா.ம.க. உழைப்பாளிகள் நிறைந்த கூட்டணியாகும். நாடாளுமன்ற தேர்தலுடன், 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க உள்ளதால், அ.தி.மு.க. கூட்டணிக்கு அமோக ஆதரவு அளிக்க வேண்டும்.

பா.ம.க.வுடன் கூட்டணி வைத்தது குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வசைபாடி உள்ளார். ஆனால் வைகோ எத்தனை முறை தி.மு.க.வை வசைபாடி உள்ளார். எனினும் அவருடன் தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. மத்தியில் நிலையான, திறமையான ஆட்சியை கொண்டு வரவேண்டும் என்பதற்காக பா.ஜனதாவுடன் இணைந்துள்ளோம். தமிழ்நாடு நிம்மதியாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் இந்தியாவில் வல்லமை படைத்த பிரதமர் மோடியால் தான் முடியும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 

Next Story