பாலியல் குற்றச்சாட்டில் இருந்து ஐ.ஜி.யை காப்பாற்ற முயற்சி: ஐகோர்ட்டில், பெண் போலீஸ் அதிகாரி புதிய மனு


பாலியல் குற்றச்சாட்டில் இருந்து ஐ.ஜி.யை காப்பாற்ற முயற்சி: ஐகோர்ட்டில், பெண் போலீஸ் அதிகாரி புதிய மனு
x
தினத்தந்தி 27 Feb 2019 11:52 PM GMT (Updated: 27 Feb 2019 11:52 PM GMT)

பாலியல் குற்றச்சாட்டில் இருந்து ஐ.ஜி. முருகனை காப்பாற்ற அமைச்சர்கள் முயற்சிப்பதாகவும், அதனால் ஐகோர்ட்டு கண்காணிப்பில் புலன்விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், பெண் போலீஸ் சூப்பிரண்டு புதிய மனுவை ஐகோர்டில் தாக்கல் செய்துள்ளார்.

சென்னை, 

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனராக இருக்கும் ஐ.ஜி. முருகன் மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். இதுகுறித்து விசாரணை நடத்த கூடுதல் டி.ஜி.பி., தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது. ஐ.ஜி. மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.

இதை எதிர்த்து ஐ.ஜி. முருகனும், புகார் கொடுத்த பெண் போலீஸ் அதிகாரியும் தனித்தனியாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ‘பாலியல் புகார் குறித்து 2 வாரத்துக்குள் விசாகா கமிட்டி விசாரித்து முடிக்க வேண்டும். சி.பி.சி.ஐ.டி. போலீசார் சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும். பெண் ஊழியர்களை பாதுகாக்கும் விதமாக அனைத்து உயர் அதிகாரிகளின் அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஐ.ஜி. முருகன் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்தனர். பின்னர், தனி நீதிபதியின் உத்தரவு தற்போதைய நிலையே தொடரவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண் போலீஸ் சூப்பிரண்டு சார்பில் ஆஜரான வக்கீல், ‘பாலியல் புகார் குறித்து டி.ஜி.பி. ஸ்ரீலட்சுமி பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்ட விசாகா கமிட்டியை ரத்து செய்யவேண்டும். இந்த வழக்கில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்து ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள், தற்போதைய நிலையே தொடரவேண்டும் என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை நீட்டிப்பதாக கூறினர். விசாரணையை வருகிற மார்ச் 6-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். இதற்கிடையில், பாலியல் புகார் செய்த பெண் போலீஸ் சூப்பிரண்டு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

ஐ.ஜி. மீது நான் கொடுத்த புகார் குறித்து விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் விசாகா கமிட்டி முதலில் அமைக்கப்பட்டது. அதன்பின்னர், கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 4-ந்தேதி விசாகா கமிட்டி மாற்றி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியின் தலைவராக டி.ஜி.பி. ஸ்ரீலட்சுமி பிரசாத் நியமிக்கப்பட்டார்.

இந்த டி.ஜி.பி., ஸ்ரீலட்சுமிபிரசாத், கடந்த ஆண்டு ஆகஸ்டு 19-ந்தேதி என்னை போனில் தொடர்பு கொண்டு, பாலியல் தொந்தரவை ஒரு விபத்தாக நினைத்து மறந்து விடும்படி அறிவுரை கூறினார். அந்த அறிவுரையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

மேலும், பாலியல் புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் என்னிடம் கடந்த 15-ந்தேதி வாக்குமூலம் பெற்றனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 19-ந்தேதி வாக்குமூலம் அளிக்க சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்துக்கு சென்றேன். அப்போது, இந்த விசாரணையை மேற்பார்வையிடும் போலீஸ் சூப்பிரண்டுக்கு, டி.ஜி.பி. ஸ்ரீலட்சுமி பிரசாத் போன் செய்து பேசினார். இதையடுத்து, வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கை அப்படியே நிறுத்தப்பட்டு விட்டது.

இதன்மூலம் ஐ.ஜி., முருகனை காப்பாற்ற வேண்டும் என்ற டி.ஜி.பி. ஸ்ரீலட்சுமி பிரசாத்தின் உள்நோக்கம் நன்றாக தெரிகிறது. அதுமட்டுமல்ல, நான் கொடுத்த பாலியல் புகார் மீது ஸ்ரீலட்சுமி பிரசாத் விசாரணை நடத்த தகுந்த அதிகாரி இல்லை என்பதும் தெளிவாகுகிறது.

மேலும், ஐ.ஜி. முருகனை காப்பாற்றவேண்டும் என்ற நோக்கத்துடன் அட்வகேட் ஜெனரலும், சிறப்பு அரசு பிளடரும் செயல்படுகின்றனர் என்று நான் அச்சப்படுவதற்கு போதுமான காரணங்கள் உள்ளன.

அதுமட்டுமல்ல, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொடுக்கப்பட்ட ஊழல் புகாரை ஐ.ஜி. முருகன் விசாரித்து, குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் எதுவும் இல்லை என்று புகாரை முடித்து வைத்து அறிக்கை தாக்கல் செய்து விட்டார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது தி.மு.க.வை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக் கம் கொடுத்த ஊழல் புகார்களையும் தற்போது ஐ.ஜி. முருகன்தான் விசாரித்து வருகிறார்.

இதுமட்டுமல்ல அமைச்சர்கள் சிலருக்கு எதிரான ஊழல் புகாரையும் ஐ.ஜி. முருகன் தான் விசாரிக்கிறார். எனவே, இவர்கள் எல்லோரும் பாலியல் புகாரில் இருந்து ஐ.ஜி. முருகனை காப்பாற்றத்தான் விரும்புவார்கள். அதனால், லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனர் பதவியில் இருந்து ஐ.ஜி. முருகனை வேறு துறைக்கு மாற்றவேண்டும்.

அதுமட்டுல்லாமல், என் புகார் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை, தமிழக அரசு கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத ஒரு போலீஸ் அதிகாரியை கொண்டு புலன்விசாரணை நடத்த வேண்டும். இந்த புலன் விசாரணையை ஐகோர்ட்டு கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இந்த மனு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Next Story