இரட்டை இலை சின்னம் கிடைத்ததன் மூலம் நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்பதை கோர்ட்டு உறுதி செய்துள்ளது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி


இரட்டை இலை சின்னம் கிடைத்ததன் மூலம் நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்பதை கோர்ட்டு உறுதி செய்துள்ளது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 28 Feb 2019 10:12 AM GMT (Updated: 28 Feb 2019 6:57 PM GMT)

இரட்டை இலை சின்னம் கிடைத்ததன் மூலம் நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்பதை கோர்ட்டு உறுதி செய்துள்ளது என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அவினாசி, 

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இரட்டை இலை சின்னம் வழக்கில் உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என்பதை டெல்லி ஐகோர்ட்டு உறுதிபடுத்தி உள்ளது. பலர் அ.தி.மு.க.வை அழித்துவிடலாம் என்று நினைத்தார்கள். சிலர் இடையில் வந்து கட்சியில் சேர்ந்து அழித்து விடலாம் என்று கங்கணம் கட்டினார்கள். எத்தனையோ இடையூறுகளை ஏற்படுத்தினார்கள். தற்போது கோர்ட்டு நல்ல நீதியை வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பின்படி அ.தி.மு.க. தொடர்ந்து வீறுகொண்டு நடைபோடும்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. அ.தி. மு.க.வை அழிக்கும் நோக்கத்தில், தி.மு.க.வின் சதித்திட்டத்தின்படி டி.டி.வி.தினகரன் இந்த வழக்கை தொடர்ந்தார். ஆனால் உரிய ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பித்து உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என்று நிரூபித்து உள்ளோம். இரட்டை இலையை எங்களுக்கே அளித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Next Story