நடிகைகள் பிரியாமணி, நளினி நடிகர்கள் கார்த்தி, விஜய் சேதுபதி உள்பட 201 பேருக்கு கலைமாமணி விருது தமிழக அரசு அறிவித்தது


நடிகைகள் பிரியாமணி, நளினி நடிகர்கள் கார்த்தி, விஜய் சேதுபதி உள்பட 201 பேருக்கு கலைமாமணி விருது தமிழக அரசு அறிவித்தது
x
தினத்தந்தி 28 Feb 2019 3:41 PM GMT (Updated: 28 Feb 2019 7:14 PM GMT)

கடந்த 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு நேற்று அறிவித்தது.

சென்னை, 

கடந்த 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு நேற்று அறிவித்தது. நடிகர்கள் கார்த்தி, விஜய் சேதுபதி, நடிகைகள் பிரியாமணி, நளினி உள்ளிட்ட 201 பேருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றமானது, தமிழ்நாடு அரசு வழங்கும் மானியத்தின் வாயிலாக கலைஞர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு கலைப்பணி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் பொதுக்குழுவில் பரிந்துரைத்தபடி, இயல், இசை, நாட்டியம், நாடகம், கிராமியம், திரைத்துறை மற்றும் சின்னத்திரை போன்ற பல்வேறு கலைப்பிரிவுகளில் புகழ்பெற்ற, திறமைமிக்க 201 கலை வித்தகர்களுக்கு மாநில அளவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கலைமாமணி விருதுகளை அறிவிப்பதில் தமிழக அரசு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. விருது பெறும் ஒவ்வொரு கலைஞருக்கும் மூன்று பவுன் (24 கிராம்) எடையுள்ள பொற்பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும்.

மேலும், அகில இந்திய அளவில் புகழ்பெற்ற தமிழக கலைஞர்களுக்கு இயல் பிரிவில், பாரதி விருதுக்கு புலவர் புலமைப்பித்தன், கவிஞர் சுப்பு ஆறுமுகம் மற்றும் சிவசங்கரி ஆகியோரும், இசைப்பிரிவில், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதுக்கு எஸ்.ஜானகி, பாம்பே சகோதரிகள் சி.சரோஜா- லலிதா மற்றும் டி.வி.கோபாலகிருஷ்ணன் ஆகியோரும், நாட்டிய பிரிவில் பால சரஸ்வதி விருதுக்கு, வைஜயந்திமாலா பாலி, வி.பி.தனஞ்ஜெயன் மற்றும் சி.வி.சந்திரசேகர் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையுடன் சான்றிதழும் வழங்கப்படும்.

இந்த விருதுகளை அரசு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குவார்.

கலைமாமணி விருது பெற்றவர்கள் சிலரின் பெயரும், அவர்கள் சாதனை புரிந்த கலைத்துறையின் விவரமும் வருமாறு:-

2011-ம் ஆண்டு: கோவி.மணிசேகரன், லேனா தமிழ்வாணன் (இயற்றமிழ்), அபஸ்வரம் ராம்ஜி (மெல்லிசை), நடிகர்கள் ஆர்.ராஜசேகர், பி.ராஜீவ், குட்டி பத்மினி (திரைப்பட நடிகை), பாண்டு (நகைச்சுவை நடிகர்), புலியூர் சரோஜா (திரைப்பட நடன இயக்குனர்), சசிரேகா (பின்னணி பாடகி), ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் (தினத்தந்தியில் இசை நிகழ்ச்சிகள் விமர்சனம் எழுதுபவர்) உள்பட 30 பேர்.

2012-ம் ஆண்டு: மகாநதி ஷோபனா (குரலிசை), திரைப்பட நடிகைகள் டி.ராஜஸ்ரீ, பி.ஆர்.வரலட்சுமி, திரைப்பட இயக்குனர் சித்ரா லட்சுமணன், கானா உலகநாதன் (கானா பாடல் கலைஞர்) உள்பட 30 பேர்.

2013-ம் ஆண்டு: நடிகர் பிரசன்னா, நடிகை நளினி, பழம்பெரும் நடிகைகள் குமாரி காஞ்சனா தேவி, சாரதா, பாண்டியராஜன் (குணசித்திர நடிகர்), டி.பி.கஜேந்திரன் (நகைச்சுவை நடிகர்), ஜூடோ ரத்தினம் (சண்டை பயிற்சியாளர், இயக்குனர்), பரவை முனியம்மா (நாட்டுப்புறப் பாடகி) உள்பட 19 பேர்.

2014-ம் ஆண்டு: நடிகர்கள் கார்த்தி, சரவணன், குணச்சித்திர நடிகர் பொன் வண்ணன், திரைப்பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, பின்னணி பாடகி மாலதி, நடன இயக்குனர் என்.ஏ.தாரா மாஸ்டர், மூத்த பத்திரிகையாளர் நியூஸ் ஆனந்தன் உள்பட 20 பேர்.

2015-ம் ஆண்டு: நடிகர் பிரபுதேவா, இயக்குனர் ஏ.என்.பவித்ரன், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, பாடலாசிரியர் யுகபாரதி, ஒளிப்பதிவாளர் ஆர்.ரத்தினவேலு, பின்னணி பாடகர் கானா பாலா, நாடக நடிகர் மாது பாலாஜி உள்பட 20 பேர்.

2016-ம் ஆண்டு: நடிகர் சசிகுமார், குணச்சித்திர நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, நகைச்சுவை நடிகர் சூரி, பத்திரிகையாளர் நெல்லை சுந்தரராஜன் உள்பட 20 பேர்.

2017-ம் ஆண்டு: நடிகர் விஜய் சேதுபதி, நடிகை பிரியாமணி, நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து, இயக்குனர் ஜி.ஹரி, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, தயாரிப்பாளர் கலைஞானம், புகைப்பட கலைஞர் ஸ்டில்ஸ் ரவி, சின்னத்திரை நடிகர் ஜி.சிவன் சீனிவாசன் உள்பட 28 பேர்.

2018-ம் ஆண்டு: நடிகர் ஸ்ரீகாந்த், நகைச்சுவை நடிகர் சந்தானம், பின்னணி பாடகர் உன்னிமேனன், தயாரிப்பாளர் ஏ.எம்.ரெத்தினம், நிர்மலா பெரியசாமி (இயற்றமிழ்), மணவை பொன்மாணிக்கம் (இயற்றமிழ்), மருத்துவ நூல் ஆசிரியர் டாக்டர் அமுதகுமார் உள்பட 34 பேர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story