தமிழகத்தில் 2018-ம் ஆண்டில் விபத்துகளின் எண்ணிக்கை 25 சதவீதம் குறைவு புள்ளி விவரங்கள் வெளியீடு


தமிழகத்தில் 2018-ம் ஆண்டில் விபத்துகளின் எண்ணிக்கை 25 சதவீதம் குறைவு புள்ளி விவரங்கள் வெளியீடு
x
தினத்தந்தி 1 March 2019 3:00 AM IST (Updated: 28 Feb 2019 11:10 PM IST)
t-max-icont-min-icon

2017-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் 2018-ம் ஆண்டில் விபத்துகளின் எண்ணிக்கை 25 சதவீதம் குறைந்துள்ளது.

சென்னை,

உலக சுகாதார அமைப்பு (டபுள்யூ.எச்.ஓ.) வெளியிட்டுள்ள கணக்கெடுப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியாவில் 2017-ம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 913 பேர் உயிரிழந்து உள்ளனர். அதில், தமிழகத்தில்தான் அதிகபட்சமாக 16 ஆயிரத்து 157 பேர் பலியாகி உள்ளனர். இதை குறைக்க பல்வேறு துறைகளின் மூலம் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

2018-ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 63 ஆயிரத்து 920 சாலை விபத்துகள் நேரிட்டு, 12 ஆயிரத்து 216 பேர் உயிரிழந்தனர். 2017-ம் ஆண்டுடன் கணக்கிட்டால் இறப்புகளின் எண்ணிக்கை 25 சதவீதமும், விபத்துகளின் எண்ணிக்கை 2.50 சதவீதமும் குறைந்திருந்தன.

கடந்த ஜனவரியில் மட்டும் தமிழகத்தில் மொத்தம் 5,173 விபத்துகள் நடந்தன. அவற்றில் சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 689 விபத்துகளும், காஞ்சீபுரத்தில் 297, திருவள்ளூரில் 108 விபத்துகளும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 12 விபத்துகளும் நடந்தன.

இந்த விபத்துகளில் மொத்தம் 993 பேர் பலியாகினர். அதிகபட்சமாக சென்னையில் 114 பேரும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 77, கோவையில் 68, நெல்லையில் 51, திருவள்ளூர் மாவட்டத்தில் 21 பேரும் இறந்தனர்.

சாலை விபத்துகளில் சென்னையில் அதிகபட்சமாக 203 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 51, நாமக்கல்லில் 48, காஞ்சீபுரத்தில் 3 பேருக்கும் கொடுங்காயங்கள் ஏற்பட்டது. அதேபோல சென்னையில் 501 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 384, காஞ்சீபுரத்தில் 312 பேருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டன.

கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மற்றும் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட விபத்துகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில், சில மாவட்டங்களில் விபத்துக்களும், இறப்புகளும் அதிகரித்து இருக்கின்றன. ஆனால் ஒட்டுமொத்தமாக 2018-ம் ஆண்டு ஜனவரியில் 5,798 விபத்துகளில் 1,189 பேர் இறந்தனர்.

2019-ம் ஆண்டு ஜனவரியில் 5,173 விபத்துகளில் 993 பேர் பலியாகி உள்ளனர். ஆக, விபத்துகளின் எண்ணிக்கை 10.78 சதவீதமும், இறப்பு எண்ணிக்கை 16.48 சதவீதமும் குறைந்திருக்கிறது. ஆனால், 2018-ம் ஆண்டு டிசம்பரில் விபத்துகளின் எண்ணிக்கை 4,643 ஆகவும், இறப்பு 950 என்ற அளவிலும்தான் இருந்திருக்கிறது.

மறு மாதத்தில், அதாவது 2019-ம் ஆண்டு ஜனவரியில் இவற்றின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 2019-ம் ஆண்டில் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின்போது சாலை விபத்துக்கள் அதிகரித்திருந்தன.

கடந்த ஜனவரியில் 185 அரசு வாகனங்கள், 186 தனியார் வாகனங்கள் (பஸ் போன்றவை), லாரி, டிரக்குகள் 462, கார், ஜீப், டாக்சி, டெம்போக்கள் 1,435, இருசக்கர வாகனங்கள் 2,273, 218 மூன்று சக்கர வாகனங்கள், 414 மற்ற வாகனங்கள் விபத்தில் சிக்கி இருக்கின்றன.

இதில் எச்சரிக்கப்படும் அளவுக்கு விபத்து எண்ணிக்கையை அதிகரித்திருப்பது இருசக்கர வாகனங்கள்தான். இதன் சதவீதம் 43.94 ஆக உள்ளது. இருசக்கர வாகன விபத்தில் மட்டும் 368 பேர் இறந்துவிட்டனர். அவர்களில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிய 174 பேர் பலியாகினர். இது 47.28 சதவீதமாக உள்ளது. இந்த 174 பேரில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 14, ஈரோடு, வேலூரில் தலா 12, கோவையில் 11, சென்னையில் 6 பேரும் அடங்குவர்.

கடந்த ஜனவரியில் ஏற்பட்ட மொத்தம் 5,173 வாகன விபத்துகளில், தேசிய நெடுஞ்சாலைகளில் 1,551 விபத்துகளும், மாநில நெடுஞ்சாலைகளில் 1,721 விபத்துகளும், மற்ற மாவட்ட சாலைகளில் 1,255 விபத்துகளும், மற்ற கிராம சாலைகளில் 646 விபத்துகளும் நேரிட்டன. இதில், மாநில நெடுஞ்சாலைகள்தான் அதிகபட்சமாக 33.27 சதவீதம் பங்களிக்கின்றன. இதில் தேசிய நெடுஞ்சாலைகளின் பங்களிப்பு 29.98 ஆகும்.

அந்த விபத்துகளில் நேரிட்ட சாவு எண்ணிக்கையை கணக்கிட்டால் அதில் 360 இறப்புகளுடன் தேசிய நெடுஞ்சாலைகள் முதல் இடத்தில் உள்ளன. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை இணைத்து கணக்கிட்டால், 63 சதவீத விபத்துகளுக்கு அந்த சாலைகள்தான் காரணமாக இருக்கின்றன.

கடந்த ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட 5,173 சாலை விபத்துகளில் 5,099 விபத்துகள், டிரைவர்களின் தவறால் நிகழ்ந்துள்ளன. இது 98.57 சதவீதமாக உள்ளது. இதில் மது குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுவது, அதிவேகம், ஆக்ரோஷமாக வாகனத்தை ஓட்டுதல், செல்போனை பயன்படுத்துதல் ஆகியவை டிரைவரின் கவனக்குறைவுக்கு காரணங்களாக உள்ளன.

வேகமாக ஓட்டுவது, அதிக பயணிகளை ஏற்றுவது, சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றுவது, மது குடித்துவிட்டு வாகனத்தை செலுத்துவது, சிக்னல்களை தவிர்ப்பது, செல்போன் பயன்படுத்துவது ஆகியவற்றுக்காக ஓட்டுனர் உரிமங்களை பறிக்க சுப்ரீம் கோர்ட்டின் குழு உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில், 2017-ம் ஆண்டில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 694, 2018-ம் ஆண்டில் 3 லட்சத்து 35 ஆயிரத்து 152, 2019 ஜனவரியில் 16 ஆயிரத்து 650 ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. 3 ஆண்டுகளிலுமே, வாகனத்தை ஓட்டும்போது செல்போனை பயன்படுத்திய குற்றம்தான் அதிகமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சென்னையில் அதிகபட்சமாக 3,140 ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. இரண்டாவதாக மதுரையில் 1,677 ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. பெரம்பலூரில் 13 ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த ஜனவரியில் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக 28 ஆயிரத்து 181 பேருக்கும், கார்களில் சீட்பெல்ட் அணியாமல் சென்ற 22 ஆயிரத்து 291 பேருக்கும் குற்ற அறிக்கை அளிக்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story