“நாங்கள் வெற்றியுடன் திரும்புவோம், வராவிட்டால் எங்களது உடை வீட்டுக்கு வரும்” நெல்லை ராணுவ வீரர் அனுப்பிய உருக்கமான ‘வாட்ஸ்-அப்’ தகவல்
“நாங்கள் வந்தால் வெற்றியுடன் திரும்புவோம், வராவிட்டால் எங்களது உடை வீட்டுக்கு வரும்” என்று போர்க் களத்துக்கு புறப்பட்ட நெல்லை ராணுவ வீரர் ‘வாட்ஸ்-அப்‘பில் உருக்கமான தகவல் பதிவிட்டு உள்ளார்.
நெல்லை,
நெல்லை ராணுவ வீரர் போர்க்களத்துக்கு புறப்பட தயாரானபோது தனது குடும்பத்தினருக்கு ‘வாட்ஸ்-அப்‘பில் உருக்கமான தகவலை வெளியிட்டு உள்ளார். அது வேகமாக பரவி பரபரப்பையும், உருக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மருகால் குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்த சுப்பையா மகன் வானுமாமலை (வயது 25). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவத்தில் வீரராக சேர்ந்தார். இவர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ராணுவ பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.
சமீபத்தில் அவர் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு திருமணம் செய்து வைக்க உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். பெண்ணை பார்த்து திருமண நிச்சயதார்த்தமும் செய்தனர். வருகிற ஜூன் மாதம் வானுமாமலை விடுமுறையில் வரும்போது திருமணம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அவ்வப்போது வருங்கால மனைவியுடன் செல்போனில் பேசி வந்தார்.
இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்துக்கு வானுமாமலை பணிபுரிந்து வரும் மத்திய பிரதேச படைப்பிரிவினரை தயார் நிலையில் இருக்குமாறும், உடனடியாக புறப்பட உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து வானமாமலை சக வீரர்களுடன் போர்க்களத்துக்கு புறப்பட்டார்.
அப்போது அடுத்தக்கட்ட நகர்வு குறித்து வானமாமலை தனது குடும்பத்தினருக்கும், குறிப்பாக வருங்கால மனைவிக்கும் தகவல் அளிக்க விரும்பினார். ‘வாட்ஸ்-அப்‘பில் பதிவிட்டு தகவல் அனுப்பி வைத்தார். அதில், இரவு பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்த எங்களது படைப்பிரிவுக்கு உத்தரவு வந்துள்ளது. இறுதி உத்தரவுக்காக காத்திருக்கிறோம். நாங்கள் வந்தால் வெற்றியுடன் திரும்புவோம், வராவிட்டால் எங்களது உடை வீட்டுக்கு வரும். இப்போது போன் பேச முடியாது. எல்லோரும் தயார் ஆகிவிட்டோம். காத்திருங்கள், நான் போன் பன்றேன்” என்று கூறி உள்ளார்.
இதற்கிடையே வானுமா மலையின் படைப்பிரிவை எல்லைக்கு அனுப்பும் உத்தரவு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் நடந்த சம்பவங்கள் குறித்து குடும்பத்தினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.
Related Tags :
Next Story