“சிறையில் நிர்மலாதேவியை சித்ரவதை செய்கின்றனர்” மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யப்போவதாக வக்கீல் பேட்டி
சிறையில் நிர்மலா தேவியை சித்ரவதை செய்கின்றனர் என்றும், போலீசார் மீது மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்யப்போவதாகவும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வக்கீல் பரபரப்பு பேட்டி அளித்தார்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட அந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் பல் கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதால் பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் சிறையில் இருந்து வெளியே வந்துவிட்டனர்.
இதற்கிடையே நிர்மலாதேவி வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா கோர்ட்டு விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் இதுகுறித்த வழக்கு நேற்று வந்தது. அப்போது, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஆஜரானார்கள். ஆனால், நிர்மலாதேவியை ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வரவில்லை. பின்னர் வருகிற 20-ந்தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோர்ட்டில் இருந்து வெளியே வந்த பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் கூறும் போது, “கோர்ட்டில் வழக்கு உள்ளதால் தற்போது கருத்து ஏதும் கூற முடியாது” என்றனர்.
பின்னர் நிர்மலாதேவியின் வக்கீல் பசும்பொன் பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த முறை நிர்மலா தேவியை கோர்ட்டுக்கு அழைத்து வந்தபோது சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடந்து கொண்ட விதம் சரியில்லை. அவரை தர, தர வென இழுத்துச் சென்றனர். இது மனித உரிமையை மீறும் செயலாகும். நிர்மலாதேவியை போலீசார் சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சிறையிலும் சித்ரவதை செய்கின்றனர்.
அவரை கோர்ட்டுக்கு அழைத்து வந்தால் தாக்கியது வெளியே தெரிந்து விடும் என்று கருதி அவரை தற்போது போலீசார் கோர்ட்டுக்கு அழைத்து வரவில்லை.
இது குறித்து மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்ய உள்ளோம். நிர்மலாதேவியை ஜாமீனில் கொண்டுவர தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story