தமிழகத்தில் கோடை காலத்தில் மின்வெட்டு இருக்காது அமைச்சர் தங்கமணி பேட்டி
தமிழகத்தில் கோடை காலத்தில் மின்வெட்டு இருக்காது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
கோடை காலத்திற்கும் குறைந்த மின் அழுத்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கோடை காலத்தில் மின் தேவை 15 ஆயிரம் மெகா வாட் அளவிற்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு தேவையான அளவிற்கு மின் உற்பத்தி இருப்பதால் தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது. மின்துறையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் வருகிற 6-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
கஜா புயல் நேரத்தில் அவர்கள் எந்த அளவிற்கு வேலை செய்தார்கள் என்பதை நானும் கண்கூடாக பார்த்தேன். அவர்களது கோரிக்கைகளை முதல்- அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளேன். அவரும் பரிசீலனை செய்வதாக கூறியுள்ளார். எனவே ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன் வரவேண்டும். அரசு நிச்சயமாக கனிவோடு அவர்களது கோரிக்கைகளை பரிசீலிக்கும். உயர்மின்கோபுரம் அமைக்கும் விவகாரத்தில் ஐகோர்ட்டு உத்தரவின்படி விவசாயிகளிடையே பேச்சுவார்த்தை நடத்த அரசும் அதிகாரிகளும் தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story