நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியா? தனித்து போட்டியா? “ச.ம.க. வின் நிலைப்பாட்டை 5-ந்தேதி அறிவிப்பேன்” சரத்குமார் பேட்டி
“நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியா? அல்லது தனித்து போட்டியா? என்பது குறித்த ச.ம.க.வின் நிலைப்பாட்டை 5-ந்தேதி அறிவிப்பேன்”, என்று சரத்குமார் கூறினார்.
சென்னை,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளராக சரத்குமார், பொருளாளராக ஏ.என்.சுந்தரேசன் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் மகளிரணி செயலாளர் ராதிகா சரத்குமார், தலைமை நிலைய செயலாளர் பாகீரதி, துணை பொதுச்செயலாளர் ஈஸ்வரன், மாநில வர்த்தகரணி துணை செயலாளர் ஆதித்தன், மாவட்ட அமைப்பாளர் ஜே.டிக்சன், செயலாளர் முருகேச பாண்டியன் உள்பட மாநில-மாவட்ட நிர்வாகிகள், பிற மாநில செயலாளர்கள், மகளிரணி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். மாநில துணை பொதுச் செயலாளர் எம்.ஏ.சேவியர் வரவேற்றார்.
பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார் பேசியதாவது:-
நான் அரசியலில் 22 ஆண்டுகள் பயணித்திருக்கிறேன். அ.தி.மு.க.வில் 10 ஆண்டு காலம் கொள்கை பரப்பு செயலாளர் போலவே செயல்பட்டிருக்கிறேன். ஆனால் அமைச்சர்கள், நிர்வாகிகள் இன்று எல்லாவற்றையும் மறந்துவிட்டனர். அதேபோல தி.மு.க. தலைவர் கருணாநிதியும் என்னை நல்ல இடத்தில் வைத்திருந்தார்? ஆனால் அக்கட்சி நிர்வாகிகளுக்கு எனது திறமை பிடிக்காமல் போய்விட்டது. இதை நானும் எதிர்பார்க்கவில்லை. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களின் சுதந்திரம் பறிபோகும்.
எனக்கு யாரை கண்டும் பயமில்லை. என்னிடம் உழைப்பு இருக்கிறது. மக்களிடம் நேரில் செல்லக்கூடிய அரசியல் தலைவன் நான். வெற்றிடம் என்பது எங்கும் கிடையாது. மக்களிடம் நமக்கான ஒரு நல்ல இடத்தை உருவாக்கிக்கொள்ள கட்சியினர் உழைக்க வேண்டும். எத்தனை தடவை கீழே விழுகிறோம்? என்பது முக்கியமல்ல, எப்படி வேகமாக எழுகிறோம்? என்பதுதான் முக்கியம். நமக்கும் தோல்வி கிடைத்திருக்கிறது. அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத்தொடர்ந்து சரத்குமாரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- நாடாளுமன்ற தேர்தலில் உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்:- ச.ம.க.வின் நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாட்டை வருகிற 5-ந்தேதி அறிவிப்பேன். கூட்டணியா? தனித்து போட்டியா? என்பது அன்று தெரியும்.
கேள்வி:- அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்ததா?
பதில்:- 2 கட்சிகளுக்கும் எனது உழைப்பு தெரியும். அதற்கு மரியாதை கொடுத்து பேச்சுவார்த்தை நடத்த முன்வந்திருக்க வேண்டும். ஆனால் என்னிடம் பேசுபவர்கள் கூட்டணி தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட குழு அல்ல. தகுதியானவர்கள் அழைத்து பேசினால் யோசிக்கலாம்.
கேள்வி:- அ.தி.மு.க.-பா.ஜ.க.-பா.ம.க. கூட்டணியை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:- பா.ம.க. சேர்ந்ததால் பலவீனம் ஏற்பட்டு இருக்கிறது.
கேள்வி:- ரஜினிகாந்த்-கமல்ஹாசன் இணைந்தால் தமிழக அரசியலில் திருப்பம் ஏற்படும் என்று விஷால் கூறியுள்ளாரே?
பதில்:- அவர் என்ன அரசியல் ஞானியா?
கேள்வி:- கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா?
பதில்:- ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு முன்பே நான் கட்சி ஆரம்பித்து விட்டேன். நாங்கள் தான் அவர்களை விட மூத்த கட்சி. பிரபலம் என்ற அடிப்படையில் அவர்கள் உயர்ந்தவர்கள், ஆனால் அரசியலில் நானே அவர்களை விட பெரியவன். கமல்ஹாசன் என்னுடன் பேச்சுவார்த்தைக்கு வந்தால் பார்க்கலாம்.
மேற்கண்டவாறு சரத்குமார் பதில் அளித்தார்.
முன்னதாக ராதிகா சரத்குமார் பேசுகையில், “கால சூழ்நிலையை கருதி சரத்குமார் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்” என்றார்.
பொதுக்குழு கூட்டத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை மத்திய-மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்பது உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story