5 பாராளுமன்ற தொகுதிகள்; 1 மேல்-சபை அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. உறுதியானது?
தே.மு.தி.க.வுக்கு 5 பாராளுமன்ற தொகுதிகளும், 1 மேல்-சபை சீட்டும் தருவதாக அ.தி.மு.க. தற்போது கூறி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலை அதீத பலத்துடன் எதிர்கொள்ள தமிழகத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பிற கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில், தே.மு.தி.க. இரண்டு பக்கமும் போக்குகாட்டுவதால், கூட்டணியை இறுதி செய்ய முடியாத நிலையில் இரு கட்சிகளும் இருந்து வருகின்றன.
மார்ச் 1-ந் தேதியை (இன்று) தி.மு.க.வும், மார்ச் 5-ந் தேதியை அ.தி.மு.க.வும் சுட்டிக்காட்டி, அதற்குள் கூட்டணி முடிவை அறிவிக்குமாறு தே.மு.தி.க.வுக்கு கெடு விதித்துள்ளன. தி.மு.க.வின் கெடு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், தே.மு.தி.க. நல்ல முடிவை எடுத்து அறிவிக்கும் என்று அக்கட்சியினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
காரணம், தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா ‘சீட்’டும் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே அளவு தொகுதிகளை அ.தி.மு.க.வும் வழங்குவதாக ஏற்கனவே தெரிவித்திருந்ததால், இந்தப் பக்கமா?, அந்தப் பக்கமா? என்று தே.மு.தி.க. யோசித்துக் கொண்டிருந்தது.
இன்று அல்லது நாளை மாலைக்குள் கூட்டணி குறித்து தே.மு.தி.க முடிவு செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தே.மு.தி.க அலுவலகத்திற்கு இன்று காலை விஜயகாந்த் வருகை தந்தார். கூட்டணி குறித்து பேச அமைக்கபட்ட குழுவுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய பிறகு முதல்முறையாக விஜயகாந்த் கட்சி அலுவலகத்திற்கு சென்று உள்ளார்.
இந்த நிலையில் தே.மு.தி.க.வுக்கு 5 பாராளுமன்ற தொகுதிகளும், 1 மேல்-சபை சீட்டும் தருவதாக அ.தி.மு.க. தற்போது கூறி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரவும், தேமுதிகவுக்கு 20 சதவீத இடங்களை ஒதுக்க ஒப்புக்கொண்டதாகவும் தகவல்.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. கட்சிகள் இருப்பதால் ஓட்டு வங்கி அதிகமாக இருப்பதாகவும், இந்த கூட்டணியில் சேர்ந்தால் வெற்றி பெறுவது நிச்சயம் என்றும் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷிடம் அ.திமு.க. மூத்த நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.
தே.மு.தி.க. கட்சிக்கு தமிழ்நாடு முழுவதும் குறிப்பிட்ட சதவீத ஓட்டுகள் இருப்பதால் எப்படியாவது அ.தி.மு.க.கூட்டணியில் சேர்த்து விட வேண்டும் என்று பா.ஜனதா மேலிடம் விரும்புகிறது. இதற்காக டெல்லியில் இருந்தும் மத்திய மந்திரி பியூஸ்கோயல் சுதீஷிடம் பேசியுள்ளார்.
அ.தி.மு.க-பா.ஜனதா இரு தரப்பில் இருந்தும் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் மற்றும் பிரேமலதாவிடம் பேசி வருகின்றனர். இதில் அ.தி.மு.க. கூட்டணியில் சேர விஜயகாந்த் சம்மதம் தெரிவித்து விட்டதாக தெரிகிறது. தே.மு.தி.க.வுக்கு 5 பாராளுமன்ற தொகுதியும் 1 மேல்- சபை சீட்டும் வழங்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், புதுச்சேரி என்.ஆர். காங்கிரசுக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் பட்சத்தில் அ.தி.மு.க. வசம் 22 தொகுதிகள் இருக்கும். இதில் 1 தொகுதி த.மா.கா.வுக்கு ஒதுக்கியது போக மீதம் உள்ள 21 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட முடிவு செய்துள்ளது.
சென்னையில் வருகிற 6-ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து தங்களது பலத்தை காட்ட பா.ஜனதா முடிவு செய்துள்ளது.
அதற்கேற்ப அ.தி.மு.க. தே.மு.தி.க. இடையே வருகிற 3-ந்தேதி கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தே.மு.தி.க.வுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்” என்று கூறினார்.
இதே போல் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், “தே.மு.தி.க.வுடன் கூட்டணி குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். ஓரிரு தினங்களில் நல்ல முடிவு கிடைக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்க்க தி.மு.க. கடும் முயற்சி மேற்கொண்டது. 3 எம்.பி. தொகுதியும், 1 மேல்-சபை தொகுதியும் தருவதாக பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் தி.மு.க. அதிருப்தி அடைந்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி விஜயகாந்தை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க முயற்சிகள் மேற்கொண்டார். கடைசி நேரத்தில் அதில் பலன் இல்லாமல் போய் விட்டது. அதேபோல இப்போது 2-வது முறையாக தி.மு.க. முயற்சி தோல்வி அடைந்துள்ளது.
Related Tags :
Next Story