மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு செய்த நற்பணிகள் நினைவில் வைத்து போற்றக்கூடியவை- பிரதமர் மோடி
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு செய்த நற்பணிகள் என்றும் நினைவில் வைத்து போற்றக்கூடியவை என பிரதமர் மோடி பேசினார்.
கன்னியாகுமரி,
ரூ.40 ஆயிரம் கோடி குமரி மாவட்ட மக்களுக்கான பல்வேறு நல திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி இன்று குமரி மாவட்டம் வந்தார். இதற்கான விழா அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பங்கேற்று உள்ளனர்.
முன்னதாக பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகை தந்தார். அவரை ஆளுநர் பன்வாரி லால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் வரவேற்றனர்.
ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே ரயில் இணைப்பை புதுப்பித்தல் மற்றும் புதிய பாம்பன் இணைப்பு பாலம் கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மார்த்தாண்டபுரம் - பார்வதிபுரம் மேம்பாலங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. சென்னை எழும்பூர் - மதுரை இடையே தேஜஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் விழா தொடங்கியது. விழாவில் பிரதமர் மோடிக்கு பொன்னாடை போர்த்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைவுப்பரிசு வழங்கினார்.
ஆளுநர், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் விழா மேடையில் உள்ளனர்.
விழாவில் பிரதமர் மோடி பேசினார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு இந்தியா. மக்கள் விரும்புவது முன்னேறத்தை வாக்கு வங்கி அரசியலை அல்ல.
* மக்கள் குடும்ப அரசியலை விரும்பவில்லை, முன்னேற்றத்தையும், நேர்மையான அரசியலையும் விரும்புகிறார்கள். மக்களின் வாக்குகளை பெற்ற முந்தைய அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
* விவசாயிகளுக்கு எதுவும் செய்யாமல், தேர்தல் நேரத்தில் கடனை தள்ளுபடி செய்வோம் என்கிறார்கள். லீப் ஆண்டு வருவது போல், விவசாயிகளுக்கான காங்கிரசின் திட்டமும் வரும்.
* விவசாயிகளுக்குக்கான ரூ.6 ஆயிரம் ஊக்கதொகை திட்டம் ஒருவாரத்தில் முடிவு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
* மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு செய்த நற்பணிகள் என்றும் நினைவில் வைத்து போற்றக்கூடியவை.
* இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் இருந்து வருகிறார் என்று நான் பெருமிதம் கொள்கிறேன்.
* தமிழ்நாட்டிலிருந்து சென்றவர் தைரியமுள்ள விங் கமாண்டர் அபிநந்தன் என்பதால் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும்.
* அண்மையில் ராணுவத்தின் செயல்பாடுகள் அதன் வலிமையை எடுத்து காட்டுவதாக உள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நமது ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டு உள்ளது.
* நாடே பாராட்டினாலும் சிலர் ராணுவத்தின் நடவடிக்கைகளை சந்தேகிக்கிறார்கள் என கூறினார்.
Related Tags :
Next Story