60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 3 March 2019 4:00 AM IST (Updated: 3 March 2019 3:28 AM IST)
t-max-icont-min-icon

மேல்நிலைப்பள்ளிக்கூட ஆசிரியர்கள் 60 ஆயிரம் பேருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு முதல் பிளஸ்-2 படித்தவுடனே சி.ஏ. என்று சொல்லப்படும் பட்டய கணக்காளர் படிப்பிற்கு 2 ஆயிரம் மாணவர்கள் சிறப்பு பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு மதுரை, திருநெல்வேலி, வேலூர், திருச்சி, கோவை, சென்னை ஆகிய இடங்களில் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

மாணவர்களுக்கு சிறந்த ஆடிட்டர்களை கொண்டு பயிற்சியளிக்கப்படும். ஐ.சி.டி. திட்டத்தின் கீழ் 8 முதல் 12-ம் வகுப்பு வரை 6 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள், 9, 10, 11, 12-ம் வகுப்புகளில் இணையதள வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் அறை அமைத்து தரப்படும். இந்த திட்டத்தை சென்னையில் நாளை (திங்கட்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார்.

பிளஸ்-2 படித்த, படிக்கின்ற மாணவ, மாணவிகளுக்கு விரைவில் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட உள்ளன. மேலும், மேல்நிலைப்பள்ளிக்கூட ஆசிரியர்கள் 60 ஆயிரம் பேர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும். 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் முறையை நீக்கியுள்ளோம். அதுவே, அவர்களுக்கு மிகப்பெரிய சலுகையாகும். வேலை வாய்ப்பிற்கு ஏற்ப ஒரு சிறிய தகுதித் தேர்வை நடத்தி ஆசிரியர் வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு சிறப்பாசிரியர்களுக்கான தேர்வாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story