ஆளுங்கட்சி வாக்கு சேகரிப்புக்காக ரூ.2,000 வழங்குகிறது; தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார்


ஆளுங்கட்சி வாக்கு சேகரிப்புக்காக ரூ.2,000 வழங்குகிறது; தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார்
x

ஆளுங்கட்சி வாக்கு சேகரிப்புக்காக ரூ.2000 வழங்குகிறது என தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார் மனு அளித்துள்ளது.

சென்னை,

கஜா புயலின் தாக்கத்தினாலும், பருவ மழை பொய்த்ததன் காரணமாகவும் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ. 2 ஆயிரம் சிறப்பு  நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கடந்த 11-ந்தேதி அறிவித்தார். 

இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழை குடும்பங்கள், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழை குடும்பங்களையும் சேர்த்து 60 லட்சம் ஏழை குடும்பங்கள் பயனடைவார்கள். ரூ.2 ஆயிரம்  அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.  இதற்காக தமிழக பட்ஜெட்டில் ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் முதல் அமைச்சர் பழனிசாமியால் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

இதுபற்றி இந்திய தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார் மனு அளித்துள்ளது.  அக்கட்சி சார்பில் அதன் அமைப்பு செயலாளரான ஆர்.எஸ்.பாரதி அளித்துள்ள மனுவில், வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு வழங்கப்படுவதாக கூறி, ஆளுங்கட்சியினர் வாக்கு சேகரிப்புக்காக ரூ.2,000 அளித்து வருகின்றனர்.  இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story