தூத்துக்குடியில் ரூ.7,300 கோடியில் புதிய அனல் மின்நிலையம் மத்திய மந்திரி பியூஸ் கோயல் நாட்டுக்கு அர்ப்பணித்தார்


தூத்துக்குடியில் ரூ.7,300 கோடியில் புதிய அனல் மின்நிலையம் மத்திய மந்திரி பியூஸ் கோயல் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
x
தினத்தந்தி 5 March 2019 1:27 AM IST (Updated: 5 March 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ரூ.7 ஆயிரத்து 300 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள புதிய அனல் மின்நிலையத்தை மத்திய மந்திரி பியூஸ் கோயல் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அருகே நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், தமிழ்நாடு மின்சார வாரியம் இணைந்து ரூ.7 ஆயிரத்து 300 கோடி செலவில் புதிதாக என்.டி.பி.எல். அனல் மின் நிலையத்தை அமைத்து உள்ளது. இதில் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன்கொண்ட 2 மின்உற்பத்தி எந்திரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மின்உற்பத்தி எந்திரங்கள் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மின்சாரம் உற்பத்தி செய்து வருகின்றன.

இந்த நிலையில் என்.டி.பி.எல். அனல் மின்நிலையம் மற்றும் என்.எல்.சி நிறுவனம் மூலம் அமைக்கப்பட்டு உள்ள 200 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி திட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பள்ளி வளாகத்தில் நேற்று காலை நடந்தது. விழாவுக்கு மத்திய ரெயில்வே மற்றும் நிலக்கரித்துறை மந்திரி பியூஸ் கோயல் தலைமை தாங்கி அனல் மின்நிலையம் மற்றும் சூரிய ஒளி மின்உற்பத்தி திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மத்திய நிதி மற்றும் கப்பல்துறை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேசியதாவது:-
நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் யாரையும் பிரதமர் விட்டு வைக்க மாட்டார். நாடு முழுவதும் இந்திய விமானி அபிநந்தன் மீது அன்பை செலுத்தி கொண்டு இருக்கிறார்கள். ஒரு கிராமத்தில் பிறந்து உலகம் முழுவதும் பாராட்டக்கூடிய ஒரு மகனை அவரது பெற்றோர் பெற்று உள்ளனர். அவர் பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தினார்.

அவருக்கு பாராட்டும் விதமாக நீங்கள் எழுந்து நின்று இடிமுழக்கம் போல் கைத்தட்டுங்கள். இது டெல்லிக்கு கேட்க வேண்டும். நீங்கள் எழுப்பும் கரவொலி பாகிஸ்தானுக்கு பயமுறுத்தலாக வேண்டும். இதனால் வேறு எந்த நாடும் இந்தியாவை பயங்கரவாத நோக்கத்தில் பார்க்க கூடாது. (அப்போது அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர்.) பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவதில் நாடு முழுவதும் ஒற்றுமையாக இருக்கிறது என்பதை நாம் பதிவு செய்வோம்.

அமைப்புசாரா தொழிலாளர்கள் நாட்டில் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு சமூக பாதுகாப்பு கொடுக்கும் வகையில் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் நாளை (அதாவது இன்று) தொடங்கப்படுகிறது.

என்.டி.பி.எல். நிறுவன ஊழியர்களுக்கு ரூ.8 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். அதே போன்று ஒப்பந்த தொழிலாளர்கள், பாதுகாப்பு படையினருக்கும் ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை அறிவிக்கிறேன். என்.எல்.சி. ஊழியர்கள் நான் கொடுத்து இருக்கும் திட்டத்தை முழுமையாக முடிக்கும் போது, உங்களுக்கும் சலுகைகளை அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாநில பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story