‘எய்ட்ஸ்’ நோயால் பாதிக்கப்பட்டவருக்கு மோசடி வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து ஐகோர்ட்டு உத்தரவு


‘எய்ட்ஸ்’ நோயால் பாதிக்கப்பட்டவருக்கு மோசடி வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 March 2019 3:00 AM IST (Updated: 5 March 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

மோசடி வழக்கில் சிக்கிய வங்கி செயலாளர், ‘எய்ட்ஸ்’ நோயால் பாதிக்கப்பட்டதால் கீழ் கோர்ட்டு அவருக்கு வழங்கிய சிறை தண்டனையை மனிதாபிமான அடிப்படையில் ஐகோர்ட்டு ரத்துசெய்துள்ளது.

சென்னை,

வேலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஒன்றில் செயலாளராக பணிபுரிந்தவர், மோசடி வழக்குகளில் சிக்கினார். அதாவது, அவர் போலி ஆவணங்கள் மூலம் ரூ.10 லட்சத்து 65 ஆயிரம் வரை பயிர்க்கடனில் மோசடியில் ஈடுபட்டதாக வணிக குற்றப் புலனாய்வு போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த வேலூர் குற்றவியல் கோர்ட்டு, அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து செயலாளர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை வேலூர் மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டு விசாரித்தது.

அப்போது, வங்கி செயலாளர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் சிறை தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்றும் வாதிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 2 வழக்குகளிலும் அவருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை, ஒரு மாத சிறை தண்டனையாக குறைத்து தீர்ப்பு அளித்தார்.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அவர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதி எம்.வி.முரளிதரன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் சி.பிரகாசம், “மனுதாரர் எய்ட்ஸ் நோயுக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரை சிறையில் அடைத்தால் அவருக்கு மட்டுமல்ல, சிறையில் உள்ள பிற தண்டனை கைதிகளுக்கும் சிரமம் ஏற்படும். எனவே, ஒருமாத சிறை தண்டனையையும் ரத்து செய்யவேண்டும்’ என்று வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி எம்.வி.முரளிதரன், ‘மனுதாரருக்கு எய்ட்ஸ் பாதிப்பு உள்ளதை அரசு தரப்பு வக்கீல் மறுக்கவில்லை. அதனால், மனிதாபிமான அடிப்படையில், மனுதாரருக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்கிறேன். அதற்கு பதில் இரு வழக்குகளுக்கும், தலா ரூ.5 ஆயிரம் வீதம், ரூ.10 ஆயிரத்தை அபராதம் மட்டும் செலுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

Next Story