500 புதிய பேருந்துகள் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
சென்னை தலைமை செயலகத்தில் ரூ.133 கோடி மதிப்பீட்டில் 500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை,
சென்னை தலைமை செயலகத்தில் ரூ.133 கோடி மதிப்பீட்டில் 500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழகத்தின் பல்வேறு போக்குவரத்து கழகங்களுக்காக 500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னையில் இருந்து திருவண்ணாமலை மற்றும் வேலூருக்கு குளிர்சாதன வசதியுடன் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேருந்துகளுக்குள் சென்று அவற்றில் உள்ள வசதிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்துத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
புதிய பேருந்துகளின் உள்ளே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாசகமான "மக்களால் நான் மக்களுக்காகவே நான்" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
இன்று தொடங்கி வைக்கப்பட்ட பேருந்துகளின் முக்கிய அம்சமாக சென்னையில் இருந்து வேலூர் மற்றும் திருவண்ணாமலைக்கு குளிர்சாதனப் பேருந்துகள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டன. தலைமை செயலகத்தில் இருந்து கோயம்பேட்டுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கும், வேலூருக்கும் செல்லும் முதல் பயணத்தில் மட்டும் கட்டணம் இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக குளிர்சாதனப் பேருந்துகளில் இருபுறமும் இரண்டிரண்டு இருக்கை வரிசைகளுக்குப் பதில் இந்த பேருந்துகளில் வழக்கமான அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் போன்று ஒருபுறம் 3 இருக்கை வரிசையும் மறுபுறம் 2 இருக்கை வரிசையும் இடம் பெற்றுள்ளன. புஷ்பேக் சீட், அறிவிப்புகளுக்காக மைக் மற்றும் 6 ஸ்பீக்கர்கள், பயணிகள் வசதிக்கு ஏற்ப குளிர்சாதன வசதியை மாற்றியமைக்க வசதி, எல்.இ.டி. விளக்குகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
அனைத்து இருக்கைகளிலும் செல்போன் சார்ஜர் வசதி, காற்றுப்போக்கி, அவசரகால வழி, முன்-பின் படிக்கட்டுகளில் தானியங்கி கதவுகளை ரிமோட் மூலம் இயக்க வசதி, பேருந்தை ரிவர்ஸ் எடுக்கும்போது தடை இருந்தால் எச்சரிக்கும் சென்சார் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் இந்த பேருந்துகளில் இடம் பெற்றுள்ளன.
சென்னைக்கு 8 பேருந்துகளும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டத்துக்கு 198 பேருந்துகளும், சேலம் கோட்டத்துக்கு 134 பேருந்துகளும், கும்பகோணம் கோட்டத்துக்கு 160 பேருந்துகளும் என மொத்தம் 500 புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இன்று வரை 603 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 ஆயிரத்து 316 புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story