ஒரு நடிகர் தேசத்துக்கு எதிராக நடிக்க வேண்டாமே: நடிகர் சித்தார்த்துக்கு எச்.ராஜா பதிலடி


ஒரு நடிகர் தேசத்துக்கு எதிராக நடிக்க வேண்டாமே: நடிகர் சித்தார்த்துக்கு எச்.ராஜா பதிலடி
x
தினத்தந்தி 5 March 2019 1:08 PM IST (Updated: 5 March 2019 1:08 PM IST)
t-max-icont-min-icon

ஒரு நடிகர் தேசத்துக்கு எதிராக நடிக்க வேண்டாமே என நடிகர் சித்தார்த்துக்கு எச்.ராஜா பதிலடி கொடுத்து உள்ளார்.

சென்னை,

பிரதமர் மோடி புல்வாமா தாக்குதல் பற்றி தான் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும்போது, ‘இந்த மண்ணுக்காக நான் சபதம் ஏற்றுள்ளேன். இந்த மண் வீழ நான் விடமாட்டேன். இந்த நாடு செயல்படாமல் நின்று போகவும் அனுமதிக்க மாட்டேன். நாடு வளைந்து போகவும் அனுமதிக்க மாட்டேன். எனது தாய் நாட்டுக்கு நான் அளிக்கும் உறுதி இது.

உங்கள் தலை பிறரை வணங்கும் வகையில் விட மாட்டேன். நான் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். எதிர்க்கட்சிகளோ என்னை ஒழித்துக்கட்ட சதி செய்கின்றன’ என்று அவர் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு குறித்து டுவிட்டரில் நடிகர் சித்தார்த் கூறியிருப்பதாவது:-

மக்கள் நமது பாதுகாப்புப்படையினர் மீது நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கு பக்கபலமாக நிற்கிறார்கள். ராணுவம் தாக்குதல் நடத்தியதை மக்கள் நம்புகின்றனர். ஆனால் உங்களையும் (மோடி), உங்களுடைய கூட்டத்தையும்தான் அவர்கள் நம்பவில்லை.

புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள். உண்மையான ஹீரோக்களுக்கு முன் நின்று கொண்டு ஹீரோ போல நடிப்பதை நிறுத்துங்கள்.

பாதுகாப்பு படையினருக்கு நீங்கள் மரியாதை கொடுங்கள். நீங்கள் ராணுவ வீரர் கிடையாது. அவ்வாறு உங்களை நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதை நிறுத்துங்கள்’. இவ்வாறு அவர் கூறி உள்ளார். 


பிரதமர் மோடி பேச்சு தொடர்பான சித்தார்த்தின் டுவிட்டுக்கு, பாஜகவை சேர்ந்த எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

சித்தார்த்தின் டுவிட் வைரலாகப் பரவியது. இதனைக் குறிப்பிட்டு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் "26/11 பயங்கரவாதத் தாக்குதலின் போது நூற்றுக்கணக்கானோர்  கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர். அப்போது விமானப்படையினர் தாக்குதல் நடத்துகிறோம் என்று கேட்டதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அனுமதியளிக்கவில்லை. ஆனால் மோடி அரசு படையினருக்கு சுதந்திரம் அளித்துள்ளது. எனவே ஒரு நடிகர் தேசத்துக்கு எதிராக நடிக்க வேண்டாமே!" என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Next Story