ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் பற்றி தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்படும் தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் பற்றி தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
சென்னை,
வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் பற்றி தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
இதுகுறித்து நிருபர்களுக்கு தலைமைச் செயலகத்தில் சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-
விளக்கம்
தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார் அளித்துள்ளது. எனது அலுவலகத்துக்கும் ஒரு நகல் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மனு மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்காக காத்திருக்கிறோம். இது தமிழக அரசின் திட்டம் என்பதால், தமிழக அரசிடமும் திட்டம் பற்றிய விளக்கத்தை கேட்க இருக்கிறோம்.
இதுபோன்ற வழக்கு ஒன்றை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் அளிக்கும் அறிவுரைகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு (கலெக்டர்) அனுப்பி வைப்போம்.
நோட்டீஸ்
இதுவரை நடந்த 2 சிறப்பு முகாம்கள் மூலம் 7 லட்சம் அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பெயர் சேர்ப்புக்காக மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் வந்தன. அந்த விண்ணப்பங்கள் பற்றி முடிவு எடுப்பதற்கான நேரடி சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருகிறது.
பெயர் நீக்கம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து 7 நாட்கள் காலஅவகாசம் தந்த பிறகுதான் அதை முடிவு செய்வோம். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் பற்றி ஆய்வு செய்வதற்கான தேதியை இந்திய தலைமைத் தேர்தல் கமிஷனர் இன்னும் தரவில்லை.
பணப்பட்டுவாடா
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பதாகவே தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக நீங்கள் கூறினால், இதில் நாங்கள் இப்போது தலையிட முடியாது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து, நாங்கள் நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் 5,660 தேர்தல் நுண் பார்வையாளர்களை நியமித்திருந்தோம். அதில் திருச்சியில் மட்டும் 271 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
வருவாய்த்துறை
ஓரிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களை இடமாற்றம் செய்யும் பணி இன்னும் முடியவில்லை. வருவாய்த் துறையினர் மேலும் சில விளக்கங்களை கேட்டுள்ளனர்.
தாசில்தார்களை வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்தால், அந்த மாவட்டத்தைப் பற்றி சரிவர தெரியாத அவர்களால் முழு அளவில் தேர்தல் பணியாற்ற முடியாது என்று வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் அந்தத் துறை தொடர்பான சங்கத்தினர் கூறியுள்ளனர். இதுபற்றியும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்காக அனுப்பி இருக்கிறோம்.
அவதூறு பரப்பினால்...
தேர்தலின் போது பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வேட்பாளர்கள் மற்றும் பலரையும் பற்றிய தகவல் போடப்படுவதுண்டு. இதில் அவதூறான தகவல்கள் பரப்பப்பட்டால், அது அவதூறுதானா என்று முடிவு செய்வதற்காக மதிப்பீடு செய்யும் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அந்தத் தகவல் அவதூறுதான் என்று முடிவு செய்யப்பட்டால், அதை அந்த வலைத்தளத்தில் இருந்து நீக்குவதற்கு அந்த நிறுவனங்களுக்கு இந்திய தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்யும். இதுகுறித்து பல்வேறு வலைத்தளங்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. அவதூறு தகவல் பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட புகார்தாரர் போலீசின் உதவியை நாடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story