நாடாளுமன்ற தேர்தல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு -2, ம.தி.மு.க.வுக்கு 1 இடம் ஒதுக்கீடு தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டி
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) இறுதியில் பல்வேறு கட்டங்களாக நடைபெற இருக்கிறது.
தேர்தல் தேதியை இன்னும் ஓரிரு தினங்களில் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், எதிர்க்கட்சியான தி.மு.க. தலைமையில் மற்றொரு கூட்டணியும் உருவாகி இருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தே.மு.தி.க.வும் இணைய இருக்கிறது.
அதேபோல், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவைகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நேற்று ம.தி.மு.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 தொகுதிகளும், ம.தி.மு.க.வுக்கு ஒரு தொகுதியும், ஒரு ராஜ்ய சபா ‘சீட்’டும் வழங்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அதேபோல், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவும் நேற்று கட்சி நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். ஆனால், அந்த கட்சிக்கு தொகுதிகள் எதுவும் வழங்கப்படவில்லை. தற்போது, தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், சரிபாதி தொகுதியான 20 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது. மீதமுள்ள 20 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் களம் காண்கின்றன.
தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ள நிலையில், கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க. தலைமையில் அமைய உள்ள கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து கலந்தாலோசித்து இன்றைக்கு ஒரு முடிவினை நாங்கள் எடுத்திருக்கின்றோம்.
வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளும், ம.தி.மு.க.வுக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதியும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் சேர்த்து மொத்தம் 40 தொகுதிகளுக்கான தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடக்கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கின்றது. இதைத் தொடர்ந்து நாளைய தினம் (அதாவது இன்று) விருதுநகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக் கூடிய ஒரு மிகப் பெரிய பேரணி, ஒரு மிகப் பெரிய மாநாடு போல் நடைபெற இருக்கிறது. அதில் நான் கலந்துகொள்ள செல்கிறேன். அந்த கூட்டம் முடிந்த பிறகு, 7-ந் தேதியில் இருந்து கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கக் கூடிய அந்த எண்ணிக்கையின் அடிப்படையில் எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பதை பற்றி, ஏற்கனவே இதற்காக பொருளாளர் துரைமுருகன் தலைமையில் அமைக்கப்பட்டிருக்க கூடிய குழு, அந்தந்த கட்சிகளின் குழுவோடு கலந்துபேசி அதற்கான பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், தி.மு.க. 34 தொகுதிகளில் போட்டியிட்டது. கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது.
ஆனால், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. அந்த கூட்டணியில் 8 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் சரிபாதி தொகுதியான 20 தொகுதிகளில் தி.மு.க.வும், மீதமுள்ள 20 தொகுதிகளில் 8 கூட்டணி கட்சிகளும் போட்டியிடுகின்றன.
கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க. தொகுதிகளை வாரி வழங்கியதற்கு, காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் தான் காரணம் என்று கூறப்படுகிறது. 21 தொகுதிகளிலும் கூட்டணி பலத்துடன் சந்திக்கும் தி.மு.க., பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று அ.தி.மு.க. அரசை ஆட்டம் காணச் செய்யவும் திட்டம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story