உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை கணவர் கைது; அதிர்ச்சி தகவல்
உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய கணவர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி,
உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய கணவர் கைது செய்யப்பட்டார்.
தக்கலை அருகே நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பேராசிரியை
குமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார்.
கடந்த 1½ வருடத்துக்கு முன்பு திவ்யாவுக்கும், தக்கலை அருகே வெள்ளிகோடு புதுவிளை பகுதியை சேர்ந்த பெர்க்மான்ஸ் மகன் பெல்லார்மினுக்கும் (33) திருமணம் நடந்தது. பெல்லார்மின் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
தகராறு
திருமணம் ஆன 2 மாதம் வரை திவ்யா, பெல்லார்மின் ஆகிய இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். அதன்பிறகு அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதும், சமாதானம் ஆவதும் என வாழ்க்கை இருந்துள்ளது.
திவ்யா கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வந்தார். நேற்று காலையில் வழக்கம் போல் அவர் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். சடையங்கால் பகுதியை சென்றடைந்த போது, அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையோரம் வாகனத்தை நிறுத்திய அவர், அந்த பகுதியில் நின்றவர்களிடம் தனக்கு மயக்கம் வருவதாக கூறியுள்ளார்.
ஆஸ்பத்திரியில் சாவு
உடனே அவர்கள், ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து சுவாமியார்மடத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே திவ்யா விஷம் வைத்து கொல்லப்பட்டதாக தகவல் பரவியது. மேலும் அவருடைய உடல் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. தகவல் அறிந்த கருங்கல் போலீசார் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
உப்புமாவில் விஷம்
இந்த நிலையில் திவ்யாவின் தந்தை ஜான் அலெக்சாண்டர் தக்கலை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திவ்யா கணவர் பெல்லார்மின், மாமனார் பெர்க்மான்ஸ், மாமியார் அமலோற்பவம் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
மேலும் பிரேத பரிசோதனைக்காக திவ்யா உடல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையே திவ்யா வீட்டில் உள்ள நாய் உப்புமாவை சாப்பிட்டு விட்டு இறந்து கிடந்தது. இதனால் திவ்யா சாப்பிட்ட உப்புமாவில் விஷம் கலந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். இதுதொடர்பாக பெல்லார்மினிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடந்தது. விசாரணையில், தன்னுடைய மனைவி சாப்பிட்ட உப்புமாவில் விஷம் கலந்த அதிர்ச்சி தகவலை கூறினார். உடனே போலீசார் பெல்லார்மினை கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். திவ்யாவுக்கு திருமணமாகி 1½ வருடமே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணையும் நடைபெறுகிறது.
உப்புமா சாப்பிட்ட நாயும் இறந்த பரிதாபம்
திவ்யாவின் கணவர் வீட்டில் 3 நாய்கள் வளர்த்து வந்துள்ளனர். இதில் ஜானி என்ற நாயிடம் திவ்யா மிகவும் பாசமாக இருந்தார். காலை, இரவு ஆகிய 2 நேரமும் திவ்யா தன்னுடைய சாப்பாட்டில் மீதியை நாய் ஜானிக்கு கொடுப்பது வழக்கம். அதேபோல் நேற்று காலையிலும் அவர், தான் சாப்பிட்ட உப்புமாவில் மீதி இருந்ததை நாய்க்கு கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட நாயும் துடிதுடித்து இறந்தது. திவ்யா சாவு குறித்து விசாரணை நடத்துவதற்காக அவருடைய கணவர் வீட்டுக்கு சென்ற போது தான் போலீசாருக்கு இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
அதன் பிறகு தான் திவ்யா சாப்பிட்ட உணவில் விஷம் கலந்து இருந்ததை போலீசார் உறுதி செய்துள்ளனர். நாய் இறந்ததை வைத்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், திவ்யாவை கொன்றதை பெல்லார்மின் ஒப்பு கொண்டார்.
குளிர்பானத்தில் பாதரசம் கலந்து ஏற்கனவே கொல்ல முயன்றார்
பேராசிரியை திவ்யாவின் தந்தை பரபரப்பு புகார்
கொலை செய்யப்பட்ட பேராசிரியை தந்தை தக்கலை போலீசில் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த ஜனவரி மாதத்தின் கடைசி வாரத்தில் பெல்லார்மின், திவ்யாவுக்கு குளிர்பானத்தில் ஒன்றை கலந்து கொடுத்துள்ளார். ஆனால் திவ்யா குடிக்காமல் அதனை தட்டி விட்டார். இதில் ஒரு பகுதி, திவ்யாவின் தாலியில் பட்டதில், அது உருகி உள்ளது. பின்னர் திவ்யாவிடம், குளிர்பானத்தில் கலந்தது பாதரசம் என்றும், உன்னை கொல்லவே பாதரசத்தை கலந்ததாக பெல்லார்மின் மிரட்டியுள்ளார்.
இந்த அதிர்ச்சி தகவலை திவ்யா என்னிடம் கூறி கதறி அழுதார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி பெல்லார்மின் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே பெல்லார்மின் திவ்யாவுடன் அடிக்கடி தகராறில் ஈடுபடும் போது, நான் வேறு திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று கூறி வந்ததும், இதனை திவ்யா தன்னுடைய குடும்பத்தினரிடம் கூறி வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனவே பெல்லார்மினுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
Related Tags :
Next Story