தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு ம.தி.மு.க. பணியாற்றும் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்


தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு ம.தி.மு.க. பணியாற்றும் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 7 March 2019 2:45 AM IST (Updated: 7 March 2019 2:29 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு ம.தி.மு.க. பணியாற்றுவது என்று பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு ம.தி.மு.க. பணியாற்றுவது என்று பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தி.மு.க. வெற்றிக்கு பணியாற்றும்

ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணாநகரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் வைகோ முன்னிலை வகித்தார். பொருளாளர் கணேசமூர்த்தி, துணை பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, துரை பாலகிருஷ்ணன், ஏ.கே.மணி உள்பட மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும், 21 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல்களிலும், தி.மு.க. தலைமையிலான அணி வெற்றி பெறுவதற்கு ம.தி.மு.க. பணியாற்றும்.

கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தை புறக்கணித்து அநீதி அளித்த மத்திய பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறியவும், மத்திய அரசுக்கு சேவகம் புரியும் அ.தி.மு.க. அரசை வீழ்த்தவும், நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான வெற்றி கூட்டணியை ஆதரித்து, மகத்தான வரலாற்று மாற்றத்திற்கு வித்திடும் வகையில் தமிழக, புதுச்சேரி மக்கள் வாக்கு அளிக்க வேண்டும்.

7 பேர் விடுதலை

7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக முதல்-அமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூடி எடுத்த முடிவைச் செயல்படுத்தாமல், 6 மாதங்களாக இழுத்தடித்து, அரசியல் சட்டத்தை மதிக்காமல், தன்னிச்சையாக செயல்பட்டு வரும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு ம.தி.மு.க. பொதுக்குழு கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது.

22 ஆண்டுகளாக சோர்வின்றி போராட்டங்களை நடத்தியும், நீதிமன்றங்களில் நேரடியாக வாதாடியும், ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு தடை ஆணை பெற்றுத்தந்த கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு பொதுக்குழு சார்பில் பாராட்டு தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தேர்தல் அறிக்கை குழு

ம.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “ம.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக உயர்நிலைக்குழு உறுப்பினர் ஆர்.டி.மாரியப்பன், அமைப்பு செயலாளர் ஆ.வந்தியத்தேவன், தீர்மானக்குழு செயலாளர் ஆவடி இரா.அந்திரிதாஸ், தேர்தல் பணிச்செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், இலக்கிய அணி மாநில தலைவர் எழுத்தாளர் மதுரா ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

Next Story