தே.மு.தி.க.வுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கூட்டணி அழைப்பு ‘டிக்கெட் கொடுத்தாச்சு, விமானத்தில் ஏற வேண்டியது தான் பாக்கி’


தே.மு.தி.க.வுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கூட்டணி அழைப்பு ‘டிக்கெட் கொடுத்தாச்சு, விமானத்தில் ஏற வேண்டியது தான் பாக்கி’
x
தினத்தந்தி 7 March 2019 9:30 PM GMT (Updated: 2019-03-08T01:15:32+05:30)

தே.மு.தி.க.வை கூட்டணிக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் ஜெயக்குமார், ‘டிக்கெட் கொடுத்தாச்சு, விமானத்தில் ஏற வேண்டியது தான் பாக்கி’ என தெரிவித்தார்.

சென்னை, 

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க அ.தி.மு.க.வுடனும், தி.மு.க.வுடனும் தே.மு.தி.க. பேசிவந்த நிலையில், திடீரென தி.மு.க. தனது கூட்டணி கதவை அடைத்துவிட்டது. இதனால், தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது மோதலில் முடிந்தது. இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை மீன்வளத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியலை பொறுத்தவரை கூட்டணி பேச்சுவார்த்தையை எல்லா கட்சிகளும் முன்னெடுக்கலாம். யாரும், யாருடனும் பேசி விருப்பம் தெரிவிக்கலாம். எங்கள் விருப்பத்தை நாங்கள் சொல்லிவிட்டோம். இதை ஏற்பதும், ஏற்காததும் தே.மு.தி.க.வின் முடிவு.

பெருத்த அவமானத்தை பெற்றிருக்கும் தே.மு.தி.க., நிச்சயமாக இனிமேல் வாழ்நாளில் தி.மு.க. பக்கம் எந்தநிலையிலும் திரும்பாது என்று நினைக்கிறேன். அதே நேரத்தில் கூட்டணி கதவுகளை நாங்கள் (அ.தி.மு.க.) மூடவில்லை. நிச்சயம் நல்ல முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

விமானம் டெல்லிக்கு புறப்பட ஆயத்தமாகி விட்டது. எல்லோரும் அமர்ந்துவிட்டோம். பேச்சுவார்த்தை எனும் அடிப்படையில் தே.மு.தி.க.வுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டோம். எனவே அவர்கள் ‘போர்டிங் பாஸ்’ எடுத்துக்கொண்டு விமானத்தில் ஏற வேண்டியது தான் பாக்கி.

எங்கள் கூட்டணி சார்பில் விமானத்தில் பயணிக்க உள்ள 40 பேரும் நிச்சயம் டெல்லி போவோம் (தேர்தல் வெற்றியை சூசகமாக குறிப்பிடுகிறார்). எனவே அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு தே.மு.தி.க. வருவது நல்லது. அவர்கள் நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story