‘பேக்கேஜ் டெண்டர்’ அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கு பொதுப்பணித்துறை முதன்மை செயலாளருக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்


‘பேக்கேஜ் டெண்டர்’ அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கு பொதுப்பணித்துறை முதன்மை செயலாளருக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 7 March 2019 9:30 PM GMT (Updated: 7 March 2019 8:25 PM GMT)

‘பேக்கேஜ் டெண்டர்’ அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை, 

புதுக்கோட்டையைச் சேர்ந்தவரும், அகில இந்திய கட்டுனர் சங்கக்குழு தலைவருமான முத்துக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகம் முழுவதும் அரசு துறைகளில் பல்வேறு பணிகளுக்கு பேக்கேஜ் டெண்டர் எனப்படும் ஒரே டெண்டர் முறையை அறிமுகப்படுத்தி கடந்த 15-ந்தேதி பொதுப் பணித்துறை சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையின்படி பல்வேறு பணிகளுக்கு ஒரே டெண்டர் விடுவதால், அதை நிவர்த்தி செய்யக்கூடிய தகுதியான காண்டிராக்டர்கள் தமிழகத்தில் மிகச்சிலர் தான் உள்ளனர். பேக்கேஜ் டெண்டர் விடுவதால் அந்த சிலர் மட்டும் தான் பொதுப்பணித்துறை வேலைகளை செய்யும் பலனை பெறுகிறார்கள்.

இதன்மூலம் சிறிய காண்டிராக்டர்களுக்கு வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. அவர்களை நம்பி இருக்கும் ஏராளமான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது. பொதுப்பணித் துறையில் ஏற்கனவே பேக்கேஜ் டெண்டர் முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பேக்கேஜ் டெண்டர் முறையை ரத்து செய்தது. அப்போது பேக்கேஜ் டெண்டர் முறையை மீண்டும் அமல்படுத்தமாட்டோம் என்று பொதுப்பணித்துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

தற்போது மீண்டும் பேக்கேஜ் டெண்டர் முறையை அமல்படுத்தி அரசாணை பிறப்பித்துள்ளனர். இதனால் சிறிய காண்டிராக்டர்களுக்கு அரசியலமைப்புச்சட்டம் வழங்கியுள்ள தொழில் உரிமை பாதிக்கப்படும். மேலும் இந்த அரசாணை பிறப்பித்ததில் உள்நோக்கம் உள்ளது. எனவே பேக்கேஜ் டெண்டர் முறை தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் கணபதிசுப்பிரமணியன் ஆஜராகி, “பேக்கேஜ் டெண்டர் முறையானது நடைமுறைக்கு முற்றிலும் பொருந்தாதது. இந்த முறையின் மூலம் பல்வேறு கட்டுமான பணிகளுக்கு ஒரே இடத்தில் இருந்து சிமெண்டு கலவை போன்ற பொருட்களை எடுத்துச் செல்வது இயலாத காரியம். எனவே இதுதொடர்பாக பொதுப்பணித்துறை பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்“ என்று வாதாடினார். விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து பொதுப்பணித்துறை முதன்மை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story