வேலூர் : துரைமுருகனின் வீட்டை முற்றுகையிட தேமுதிகவினர் முயற்சி - போராட்டம்


வேலூர் : துரைமுருகனின் வீட்டை முற்றுகையிட தேமுதிகவினர் முயற்சி - போராட்டம்
x
தினத்தந்தி 8 March 2019 6:04 AM GMT (Updated: 2019-03-08T11:34:40+05:30)

வேலூர் காட்பாடி காந்திநகரில் உள்ள துரைமுருகனின் வீட்டை முற்றுகையிட தேமுதிகவினர் முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காட்பாடி,

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ரகசியமாக துரைமுருகன் மூலமாக திமுகவுடனும், தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த தகவலை பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் துரைமுருகன் வெளிப்படுத்தினார்.  

கூட்டணி குறித்த ரகசிய பேச்சு அம்பலமானதால், தி.மு.க. பொருளாளர் துரைமுருகனும், தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீசும் காரசாரமாக மோதிக் கொண்டனர். நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ், துரைமுருகனுடன் 10 நாட்களுக்கு முன்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தற்போது பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் கூறினார். 

இதற்கு பதில் அளித்த  துரைமுருகன், தேமுதிக பரிதாப நிலையில் உள்ளது. நான் மேலும், அவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் மீண்டும் கருத்து  சொல்ல விரும்பவில்லை என்று கிண்டலாக பதில் அளித்தார். இந்த விவகாரங்கள் தேமுதிகவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. 

இதன் தொடர்ச்சியாக இன்று காலை வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள துரைமுருகன்  இல்லத்தை தேமுதிகவினர் முற்றுகையிட முயற்சி செய்தனர்.
கையில் கருப்புக் கொடிகள் மற்றும் தங்கள் கட்சி கொடிகளுடன் அவர்கள் வந்திருந்தனர். ஆண்களும் பெண்களும் திரளாக இதில் பங்கேற்றனர். ஆனால், போராட்டத்தை நடத்துவதற்கு போலீசார் அனுமதி தர மறுப்பு தெரிவித்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் கோபமடைந்த தேமுதிக தொண்டர்கள், காட்பாடி- சித்தூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story